பயிர்களை சேதப்படுத்தும் வளர்ப்பு பன்றிகள் வாழ்வாதாரம் பாதிப்பதால் விவசாயிகள் கவலை
கீழ்கதிர்பூர்:காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூர், குண்டுகுளம், திருப்பருத்திகுன்றம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், 400க்கும் மேற்பட்ட ஏக்கரில், நெல் பயிரிட்டு வருகின்றனர்.இப்பகுதியில் கூட்டமாக வரும் வளர்ப்பு பன்றிகள் விவசாய நிலத்தில் நடவு செய்வதற்காக இருப்பு வைத்திருக்கும் நாற்றங்கால்களையும், அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்மணிகளையும் சேதப்படுத்தி விடுகின்றன.பன்றிகளை விரட்ட வயல்வெளி ஓரங்களில், பல வண்ண நிறங்களில் சேலை மற்றும் வேட்டிகளை கட்டி வைக்கின்றனர். இருப்பினும், வளர்ப்பு பன்றிகள் வயல்வெளிக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இதனால், விவசாயத்தில் பெருத்த நஷ்டம் ஏற்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து கீழ்கதிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:எங்கள் ஊரில் தனி நபர் ஒருவர் வளர்க்கும் பன்றிகள் விவசாய நிலத்தை நாசம் செய்து வருகின்றன. அதை விரட்ட முயன்றால் கடிக்க வருகிறது. இதனால், பன்றி கடிக்கு சிகிச்சை பெற வேண்டும் என்பதால், பன்றியை விரட்ட அச்சப்படுகிறோம்.மூன்று மாதத்திற்கு முன், குண்டுரக நெல் சாகுபடி செய்திருந்தோம். அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில், வளர்ப்பு பன்றிகள் எங்கள் நிலத்தை நாசம் செய்து விட்டது.இதனால், விவசாயத்தில் முதலீடு செய்த அசல் பணத்தை எடுக்க முடியாமல் உள்ளதால், எங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது.எனவே, விவசாய நிலங்களை நாசமாக்கும் வளர்ப்பு பன்றிகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கண்ணீர் மல்க கூறினர்.