படப்பை ஊராட்சியில் குப்பை குவியல் தீ வைத்து எரிக்கப்படுவதால் அவதி
படப்பை:படப்பை ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, மலை போல் கொட்டி வைத்து எரிக்கப்படுவதால், சுற்றுவட்டார பகுதி மக்கள் அவதிக்குஉள்ளாகின்றனர். அதனால், குப்பையை அழிக்க அமைக்கப்பட்ட, 1.22 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திர கூடங்களை பயன்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சியில், 20,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில், தினமும் சேகரமாகும் குப்பை, படப்பை- - புஷ்பகிரி சாலையில் மலை போல் கொட்டிக் குவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக், இறைச்சி, காய்கறி உள்ளிட்ட கழிவுகள் அதிகம் கொட்டப்படுவதால், அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.இந்த குப்பையை அழிக்க, ஊராட்சி நிர்வாகம் சார்பில், அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகிறது.குப்பையில் இருந்து வெளியேறும் புகை, 24 மணி நேரமும் வெளியேறி, குடியிருப்பு பகுதியை சூழ்வதால், குப்பை கிடங்கு அருகே வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.அதுமட்டுமின்றி, பொதுமக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. குப்பையை தீ வைத்து எரிப்பதை நிறுத்தி, மாற்று வழியில் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வீணாகும் நவீன இயந்திரங்கள்
படப்பை ஊராட்சியில், நாள் ஒன்றுக்கு, 4,000 கிலோ குப்பை சேகரமாவதால், படப்பை ஊராட்சியில் குப்பை அகற்றுவது பெரும் பிரச்னையாக இருந்து வந்தது. அதனால், குப்பை அகற்றும் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை நிதி உதவியுடன், குப்பையை அழிக்க, 61 லட்சம் ரூபாய் மதிப்பில், காந்த வெப்ப சிதைவு இயந்திர கூடம், கடந்த 2022ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த இயந்திரம், எண்ணெய், டீசல், மின்சாரம், நிலக்கரி ஆகிய எரிபொருள் இல்லாமல், காந்த சக்தி வாயிலாக ஏற்படும் வெப்பத்தால் குப்பையை சாம்பலாக்குகிறது.இந்த இயந்திரத்தில், 200 கிலோ குப்பையை உள்ளீடு செய்தால், 1 கிலோ சாம்பல் கழிவுகள் மட்டும் வெளிவரும். நாள் ஒன்றுக்கு, 5,000 கிலோ குப்பையை அழிக்க முடியும் என, அறிவிக்கப்பட்டது. மேலும், அரசு நிதியில், 36 லட்சம் ரூபாய் மதிப்பில், பிளாஸ்டிக் அரவை கூடமும், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், இயற்கை உரம் தயாரிக்கும் நுண்ணுயிரி கூடமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தால், படப்பை ஊராட்சி குப்பை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த இயந்திரங்கள் பயன்பாடின்றி உள்ளன.