மழைக்கு முன் சீரமைக்கப்படாத சாலைகள் படுமோசமாக காட்சியளிப்பதால் அச்சம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த நான்கு நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெஞ்சல் புயல் காரணமாக, கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் காஞ்சிபுரம் நகரில் கனமழை பெய்தது. இதனால், மாநகராட்சியின் சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடியது மட்டுமல்லாமல், சாலைகள் படுமோசமாக காட்சியளிக்கின்றன. காஞ்சிபுரம் மாநகராட்சியில், மழைக்கு முன்பாக சாலைகள் சீரமைக்க வேண்டும் என, நகரவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், சொற்ப எண்ணிக்கையிலான தெருக்களில் மட்டும் சாலைகள் சீரமைத்துவிட்டு, பெரும்பாலான தெருக்களில் உள்ள பெரிய அளவிலான பள்ளங்கள் அப்படியே கண்டும் காணாமல் விட்டுள்ளனர். இதனால், மழைக்காலத்தில் மேலும் மோசமாக காட்சியளிக்கிறது. மாநகராட்சி முழுதும், 300 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ள இருப்பதால், புதிதாக சாலைகள் ஏதும் அமைக்கப்படாது என, அதிகாரிகள் கூறி வரும் நிலையில், சாலைகளை சீரமைக்க அலட்சியம் காட்டுவதாக நகரவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்பெரிய அளவிலான பள்ளங்களில் மழைநீர் தேங்கியும், கற்கள் உடைந்தும் காணப்படுகின்றன. பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் அதில் விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக, பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் படுமோசமாக உள்ளன. சாலைகளை சீரமைக்க கவுன்சிலர்கள், மேயர், பொறியாளர் பிரிவு அதிகாரிகள் போன்றோரிடம் முறையிட்டும் பலனளிக்கவில்லை என நகரவாசிகள் தெரிவிக்கின்றனர். மழைக்கு முன்னதாகவே சீரமைத்திருக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் புலம்பி செல்கின்றனர்.