மரக்கடையில் தீ விபத்து இயந்திரங்கள் எரிந்து சேதம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, காரணி மண்டபம் பகுதியில் இயங்கி வந்த மரக்கடையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.உத்திரமேரூர் தாலுகா, பென்னலுார் கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ்குமார், 31. இவர், காரணி மண்டபம் பகுதியில் வாடகை கட்டடத்தில் மரக்கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில், இவர், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல வேலை முடித்து, மரக்கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின், நேற்று அதிகாலை 5:00 மணியளவில் மரக்கடையில் இருந்து திடீரென்று கரும்புகை வந்தது.இதை கண்ட கட்டட உரிமையாளர் சம்பவம் குறித்து, உத்திரமேரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மரக்கடை கதவை திறந்தனர்.அப்போது, அங்கிருந்த மரங்கள் மற்றும் இயந்திரங்கள் தீப்பற்றி எரிந்து, அப்பகுதியில் புகை சூழ்ந்தன. உடனே, தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமானது. சம்பவம் குறித்து, பெருநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.