உத்திரமேரூர் புறவழிச்சாலை பணி கூடுதலாக ஐந்து சிறு பாலங்கள்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் புறவழிச்சாலை அமைக்கும் பணியில், 25 சிறுபாலங்கள் கட்டிய நிலையில், கூடுதலாக ஐந்து சிறு பாலங்கள் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சியில் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, சாலைகளில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தினமும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். இதை தவிர்க்க, உத்திரமேரூரில் புறவழிச்சாலை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2013ல் நடந்த சட்டசபையில் உத்திர மேரூரில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, 7 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. உத்திரமேரூர் புறவழிச் சாலையானது, ஏ.பி., சத்திரம் பகுதியில் இருந்து மல்லிகாபுரம் வழியாக வேடபாளையம் சாலைவரை, 4.2 கி.மீ., அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, தனியார் நிலங்களை கையகப் படுத்தி அதற்கு இழப்பீடு வழங்கப்பட்டன. இதனால், புறவழிச் சாலை அமைக்க போதிய நிதி இல்லாத நிலை ஏற்பட்ட தால், எட்டு ஆண்டு களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து, 2023ல் 26.25 கோடி ரூபாய்க்கு புதிய மதிப்பீடு செய்து அதற்கான நிர்வாக ஒப்புதலும் பெற்று பணி நடந்து வந்தது. இதையடுத்து, அதே ஆண்டில் திட்ட மதிப்பீடு 37 கோடியாக உயர்த்தப்பட்டு பணி நடந்து வந்த நிலையில், பெஞ்சல் புயலால் சில நாட்கள் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது, உத்திரமேரூர் புறவழிச்சாலை அமையும் இடத்தில் 30 ஏரி நீர்பாசன கால்வாய்கள் உள்ளன. இதில் 25 சிறு பாலங்கள் மட்டுமே அமைக்க திட்ட மிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வந்தன. மீதமுள்ள ஐந்து ஏரி நீர்ப்பாசன கால்வாய்கள் சாலை அமைக்கும் பணியால் மண் கொட்டி மூடப்பட்டது. இதனால், இந்த கால்வாய்களை நம்பியிருந்த 3,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. எனவே, ஐந்து பாசன கால்வாய்கள் மீது சிறு பாலங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, நெடுஞ்சாலைத் துறையினர் உத்திரமேரூர் புறவழிச்சாலை அமைக்கும் பணியில், கூடுதலாக ஐந்து சிறு பாலங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இது குறித்து நெடுஞ் சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உத்திரமேரூர் புறவழிச் சாலை அமைக்கும் பணியில் 25 பாசன கால்வாய்கள் மீது சிறுபாலம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேலும், ஐந்து பாசன கால்வாய் மீதும் சிறு பாலங்கள் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, புதிதாக ஐந்து சிறுபாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.