உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / படப்பையில் மேம்பாலம் கட்டுமானப்பணி...ஆமை வேகம்!:கனரக வாகனங்களால் தொடரும் நெரிசல்

படப்பையில் மேம்பாலம் கட்டுமானப்பணி...ஆமை வேகம்!:கனரக வாகனங்களால் தொடரும் நெரிசல்

படப்பை:காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பஜார் பகுதியில், மேம்பாலம் கட்டுமானப் பணிகள், மந்தகதியில் நடந்து வருவதால், வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களால், ஒவ்வொரு நாளும் நெரிசல் இருமடங்காக அதிகரித்து வருகிறது.வண்டலுார் - -வாலாஜாபாத் சாலையானது சென்னை -- திருச்சி ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்டச் சாலை, சிங்கபெருமாள்கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது.ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் பகுதி யில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், வண்டலுார் - -வாலாஜாபாத் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து, நெரிசல் ஏற்படுகிறது.நெரிசலைக் குறைக்க நான்குவழிச் சாலையான வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையை ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டது.

கனரக லாரி

இந்த சாலையில் படப்பை பஜாரில் 800க்கும் மேற்பட்ட வணிக கடைகள் உள்ளன. சாலை விரிவாக்கம் செய்ய நிலத்தின் மதிப்பீடு அதிகம் என்பதாலும், விரிவாக்கம் செய்ய வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் படப்பை பஜாரில் சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, 2022, ஜனவரியில் துவங்கியது.படப்பை பஜாரில் 690 மீட்டர் நிளம், 17.20 மீட்டர் அகலத்தில் அமையும் இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகளை, 18 மாதங்களில் முடிக்க காலம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டு, 10 மாதங்கள் கடந்த நிலையிலும், பாலம் கட்டுமான பணி நிறைவடையவில்லை.மந்தகதியில் நடக்கும் பாலம் கட்டுமானப் பணியால், படப்பையில் போக்குவரத்து நெரிசல் வழக்கத்தைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது.அதுமட்டுமின்றி, வண்டலுார்- - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் ஜல்லி, பாறைக்கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு அதிக அளவில் கனரக லாரிகள் செல்கின்றன.இதனால், படப்பையில் நெரிசலும், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. நெரிசலை கட்டுப்படுத்த படப்பை பஜாரில் பாலம் கட்டுமானப் பணி முடியும் வரை, 'பீக் ஹவர்ஸ்' நேரமான காலை 8:00 மணி முதல், 10:00 மணி வரை, மாலை 6:00 முதல், இரவு 8:00 மணி வரை, கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், இதை மதிக்காத லாரிகள் 24 மணி நேரமும் செல்கின்றன.மேலும், ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்துகள் ஒரே நேரத்தில் அதிக அளவில் செல்வதால் படப்பையில் 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் நெரிசலில் சிக்கி காலை மாலை நேரங்களில் அணிவகுத்து நிற்கின்றன.

நான்கு மாதம்

பாலம் கட்டுமான பணிக்காக சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால், சாலை குறுகலாக மாறியதால், படப்பை பஜாரில் போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட இரு மடங்கு அதிகரித்தது. நெரிசலை கட்டுப்படுத்த, பாலம் கட்டுமான பணி நடக்கும் இடத்தின் அருகே இருந்த பேருந்து நிறுத்தம், வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், படப்பை பஜார் பகுதி வழியே தினமும் ஏராளமான கனரக லாரிகள் செல்வதால், நாள் முழுக்க நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இதனால், படப்பையில் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக உள்ளது. எனவே, பாலப் பணி நிறைவடையும் வரை, பகல் நேரத்தில் படப்பை பஜார் வழியே கனரக லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும். தொழிற்சாலை பேருந்துகள் ஒரே நேரத்தில் செல்லாமல் குறிப்பிட்ட இடைவெளியில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பாலம் கட்டுமான பணி 50 சதவீதம் முடிந்து விட்டது. எஞ்சியுள்ள பணிகளை நான்கு மாதங்களில் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !