9,000 மாணவ -- மாணவியருக்கு வழங்க தயாராகும் இலவச சைக்கிள்
உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்தாண்டு பிளஸ்- 1 படிக்கும் 9,000 மாணவ -- மாணவியருக்கு, டிசம்பருக்குள் வழங்குவதற்காக இலவச சைக்கிள் தயாராகி வருகிறது. தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ -- மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்கள், காலணி, சீருடை, புத்தகம், பை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, பிளஸ் -1 படிக்கும் மாணவ -- மாணவியருக்கு ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும், பள்ளி மாணவ - மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 10 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் என, 62 பள்ளிகளில், 9000 மாணவ -- மாணவியர் பிளஸ் -1 படித்து வருகின்றனர். இவர்களுக்கு சைக்கிள் வழங்க, பஞ்சாப் மாநிலம், லுாதியானாவில் உள்ள ஆவான் நிறுவன சைக்கிள் உதிரி பாகங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட சைக்கிள் உதிரி பாகங்கள், காஞ்சிபுரம் ஆந்திரசன் பள்ளியிலும், வாலாஜாபாத் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், உத்திர மேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், குன்றத்துார் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, மூன்று நாட்களாக சைக்கிள் உதிரி பாகங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில், வட மாநில தொழிலாளர்களின் மூலம் டயர், வீல் மற்றும் இதர பாகங்களை இணைத்து, சைக்கிள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. அதில், காஞ்சிபுரம் வட்டாரத்தில் 2,800 சைக்கிள் கள், உத்தரமேரூர் வட்டாரத்தில் 1,400 சைக்கிள்கள், வாலாஜாபாத் வட்டாரத்தில் 2,000 சைக்கிள்கள், ஸ்ரீபெரும்புதுார் வட்டாரத்தில் 800 சைக்கிள்கள், குன்றத்துார் வட்டாரத்தில் 2,000 சைக்கிள்கள், மாணவ -- மாணவியருக்கு வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி கூறிய தாவது: இந்தாண்டு பிளஸ் -1 படிக்கும் மாணவ -- மாணவியருக்கு, தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வரும், டிசம்பர் மாதத்துக்குள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9,000 இலவச சைக்கிள்கள் மாணவ -- மாணவியருக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.