அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் கருடசேவை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் புஷ்பவல்லி தாயார் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும்.நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் சப்பரத்தில் எழுந்தருளிய அஷ்டபுஜ பெருமாள் வீதியுலா வந்தார். மாலை சிம்ம வாகன உத்சவம் நடந்தது. இரண்டாம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் காலை ஹம்ச வாகனத்திலும், மாலை சூரிய பிரபையிலும் சுவாமி உலா வந்தார்.மூன்றாம் நாள் உத்சவமான நேற்று காலை கருடசேவை உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அஷ்டபுஜ பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். மாலை ஹனுமந்த வாகன உத்சவம் நடந்தது. ஏழாம் நாள் உத்சவமான வரும் 19ல் காலை தேரோட்டமும், மாலை திருமஞ்சனமும் நடைபெறுகிறது. உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.* ராமானுஜரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா, ஏப், 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து இரண்டாம் நாள் காலை சேஷவாகனம், மாலை ஹம்ச வாகனத்தில் விதியுலா நடந்தது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று, காலை கருட சேவை வாகனம், மாலையில் ஹனுமந்த வாகனத்தில் ஆதிகேசவப் பெருமாள் விதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் வழிப்படனர்.