உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியை புரட்டியெடுத்த கனமழை குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் கடும் பாதிப்பு

காஞ்சியை புரட்டியெடுத்த கனமழை குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் கடும் பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, ஒரே நாளில் 41 ஏரிகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகின்றன. பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்ய வேண்டிய இயல்பான மழையளவு காட்டிலும், கூடுதலாக 12 சதவீதம் மழை பெய்திருப்பது தெரியவந்துள்ளது.மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்பாக, 71 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் பெய்த கனமழையால், ஒரே நாளில், 41 ஏரிகள் நிரம்பியது நீர்வள ஆதாரத்துறையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்க கடலில் அடுத்த சில நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என, சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்தால், நிரம்பாத ஏரிகளும் வேகமாக நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 75 சதவீதம் நிரம்பியுள்ள 94 ஏரிகள் முழுமையாக நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.படப்பை அருகே ஆதனுார், ஒரத்துார், சோமங்கலம் ஆகிய மூன்று பகுதிகளில் இருந்து துவங்கும் அடையாறு கிளை கால்வாய், வரதராஜபுரத்தில் ஒன்றாக இணைந்து, சென்னை பட்டினம்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.சோமங்கலம் ஏரி, மணிமங்கலம் ஏரி, ஒரத்துார் நீர்த்தேக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரி நீரால், அடையாறு கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், வரதராஜபுரத்தில் தாழ்வான பகுதிகளான பி.டி.சி.,நகர், பரத்வாஜ் நகர், அஷ்டலட்சுமி நகர், வைதேகி நகர், விஜய் நகர் உள்ளிட்ட பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.விஜய் நகரில், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய ஒரு குடும்பத்தினரை, தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் சென்று, நேற்று மீட்டனர். குடியிருப்பை சூழ்ந்த வெள்ள நீரால் அப்பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் மணிமங்கலம் ஏரி உள்ளது. 18.5 அடி ஆழம் உடைய இந்த ஏரி, வடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, ஏரியின் மூன்று கலங்கள் வழியே உபரி நீர், நேற்று முதல் வெளியேறுகிறது. இந்த ஏரியின் உபரி நீர், அடையாறு கால்வாயில் கலந்து வரதராஜபுரம் பகுதிக்கு செல்வதால், அங்கு தாழ்வான குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து, பல ஏரிகளில் உபரி நீர் வெளியேறி வருகிறது. அந்த வகையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைப்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டி, கலங்கல் வழியை உபரி நீர் ஆர்ப்பரித்து வெளியேறி வருகிறது.செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் இந்த உபரி நீர் கால்வாய் முழுமையாக நிரம்பி, ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் சாலையில் பல இடங்களில் வெள்ளி நீர் சாலையை மூழ்கடித்து கடந்து செல்கிறது. இதனால், நேற்று காலை, இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் அப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில்4, 500 கன அடி உபரி நீர் திறப்பு

சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி 3.64 சி.எம்.சி.,கொள்ளளவும், நீர் மட்டம் 24 அடி ஆழமும் கொண்டது. கன மழையால் இந்த ஏரியின் நீர் மட்டம் நேற்று காலை நிலவரப்படி 23.29 அடியும், கொள்ளளவு 3.45 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. மேலும், ஏரிக்கு வினாடிக்கு 6498 கன அடி நீர் வந்தது. இதையடுத்து நேற்று காலை 8:00 மணிக்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து காலை 10:30 மணிக்கு ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 4,500 கன அடியாக உயர்த்தப்பட்டது. ஏரியில் இருந்து வெளியேறும் நீரால் குன்றத்துார், -ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் குன்றத்துார் மேம்பாலம் அருகே சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த பகுதியை கடந்து சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ஏரியின் உபரி நீர் செல்லும் சிறுகளத்துார், காவனுார், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாற்றின் இருபுறமும் தாழ்வாக உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசு தரப்பில் வெள்ள ஆபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இயல்பை காட்டிலும் கூடுதலாக மழை பொழிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில், வடகிழக்கு பருவமழை காலத்தில், 54.5 செ.மீ.,மழை இயல்பாக பெய்ய வேண்டும். கடந்த சில நாட்களாக கனமழை பெய்வதால், இயல்பை காட்டிலும், கூடுதலாக 12 சதவீதம் மழை பெய்து, 60.8 செ.மீ.,மழை பெய்திருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தனது இணையதளத்தில் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய இயல்பான மழையை, இரண்டரை மாதங்களிலேயே பெய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு நாட்கள் பெய்த மழையளவு( செ.மீ.,)

ஊர் மழையளவுஸ்ரீபெரும்புதுார் 16.6செம்பரம்பாக்கம் 14.1குன்றத்துார் 13.8உத்திரமேரூர் 11.0காஞ்சிபுரம் 9.8வாலாஜாபாத் 4.9

சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில் உள்ள குளக்கரை பகுதியில் சின்னக்குழந்தை, 69. என்ற மூதாட்டி வசித்து வந்தார். சிமென்ட் ஷீட் போட்ட வீட்டில், தனியாக வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். கனமழை காரணமாக நள்ளிரவு 12:00 மணியளவில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. துாங்கி கொண்டிருந்த மூதாட்டி மீது, சுவர் விழுந்ததால், படுகாயமடைந்தார். அருகில் வசிப்பவர்கள் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரிந்தது.வருவாய்துறையினர், பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

கூவம் ஆற்றில் விழுந்த பெண் மீட்பு

விருகம்பாக்கம் அருகே, கூவம் ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க பெண் தவறி விழுந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.சென்னை போலீஸ் கமிஷனரின் சிறப்பு அதிவிரைவு படையினர் விரைந்து, 'பொக்லைன்' இயந்திரத்தை பயன்படுத்தி கூவத்தில் தத்தளித்த பெண்ணை மீட்டனர். பின், அவரது உறவினர்களை வரவழைத்து அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக, விருகம்பாக்கம் போலீசார் உண்மையில் பெண் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்வதற்காக குதித்தாரா என விசாரிக்கின்றனர்.சிறப்பாக செயல்பட்டு பெண்ணை மீட்ட சிறப்பு அதிவிரைவு படையினரை, கமிஷனர் அருண் பாராட்டினார். - நமது நிருபர் குழு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை