கரும்பு பரப்பை குறைத்து நெல் பயிரிடுவது...அதிகரிப்பு: அறுவடை, விற்பனை எளிது என்பதால் ஆர்வம்
உத்திரமேரூர்:கரும்பு சாகுபடிக்கான குறைந்தபட்ச விலையை அரசு உயர்த்தாதது, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், கரும்பு பயிரிடுவதை குறைத்து, நெல் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டாரத்தில் 17,000 விவசாயிகள் உள்ளனர். இவர்கள் கரும்பு, நெல், வேர்க்கடலை ஆகிய பயிர்களை பிரதானமாக சாகுபடி செய்து வருகின்றனர்.இதில், சீட்டணஞ்சேரி, ஒரக்காட்டுபேட்டை, கரும்பாக்கம், மாம்பாக்கம், பினாயூர், திருப்புலிவனம், மருதம், காவித்தண்டலம் ஆகிய பகுதிகளில், கரும்பு பயிரிடுவது பிரதானமாக இருந்து வருகிறது.மாவட்டத்திலேயே, உத்திரமேரூர் வட்டாரத்தில் தான் கரும்பு சாகுபடி அதிகமாக நடந்து வருகிறது. இந்த கரும்பு சாகுபடிக்கு ஏரி பாசனம், கிணற்று பாசனம், ஆற்று பாசனம் ஆகியவற்றின் வாயிலாக நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், 1 ஏக்கர் கரும்பு உற்பத்தி செய்வதற்கு, 1.20 லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு செலவாகிறது. இதில், 1 டன் கரும்புக்கு சாகுபடிக்கு 2,600 ரூபாய்க்கு மேல் செலவாகிறது.ஆனால் அரசு, டன் ஒன்றுக்கு வழங்கும் 3,150 ரூபாயில், வெட்டுக்கூலிக்கு 1,300 - 1,600 வரை செலவாகிறது. மீதம் விவசாயிகளுக்கு 1,550 ரூபாய் கிடைக்கிறது. தவிர, வெட்டப்பட்ட கரும்புகளை வாகனங்களில் ஏற்றி, கரும்பு அரவை ஆலைகளுக்கு ஒரு நடை அனுப்ப 2,000 ரூபாய் வீதம் செலவாகி வருகிறது.கரும்பு உற்பத்திக்கு அதிகப்படியான செலவு ஆகும் நிலையில், கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த, விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனாலும், அரசு கண்டுகொள்ளவில்லை. தவிர, கரும்பு சாகுபடிக்கு நீர் தேவையும் அதிகமாக இருக்கிறதுஇந்நிலையில், உத்திரமேரூர் வட்டாரத்தில் இரண்டு ஆண்டுகளாக கரும்பு சாகுபடியை குறைத்து, நெல் சாகுபடி பரப்பளவை அதிகமாக்கி உள்ளனர்.அதில், 2023 - 24ம் ஆண்டில், 1,359 ஏக்கர் பரப்பளவு கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. 2024 - 25ம் ஆண்டில், 979 ஏக்கர் பரப்பளவு கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 381 ஏக்கர் பரப்பளவு கரும்பு சாகுபடி குறைந்துள்ளது.இதற்கு பதிலாக விவசாயிகள் நெல், உளுந்து, வேர்க்கடலை ஆகியவற்றை பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக, இரண்டு ஆண்டுகளாக உத்திரமேரூர் வட்டாரத்தில் போதிய அளவு பருவமழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள் கரும்புக்கு பதிலாக, நெல் பயிரிடுவதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.இதனால், 2023 - 24ம் ஆண்டில் 38,173 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெல், 2024 - 25ம் ஆண்டில் 40,649 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒப்பிடுகையில் 2,475 ஏக்கர் பரப்பளவு நெல், அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:கரும்பு பயிரிடுவதால் அதிகமாக பணமும், நீரும் செலவு ஏற்படுகிறது. கரும்பு வெட்டுவதற்கு போதிய கூலி ஆட்கள் கிடைக்காமல் அலைந்து திரிய வேண்டியுள்ளது.கரும்பு வெட்டி அதை அரவை தொழிற்சாலைக்கு அனுப்புவதற்கான வாகன கட்டணமும் அதிகமாகிவிட்டது. எனவே, கரும்பு பயிர் செய்வதை தவிர்த்து, குறைந்த செலவில் நெல் சாகுபடி செய்து வருகிறோம்.அவ்வாறு சாகுபடி செய்யும் நெல், அந்தந்த கிராமங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களின் வாயிலாக விற்று, குறித்த நேரத்தில் வருவாய் கிடைக்கிறது. எனவே, கரும்பு சாகுபடியை தவிர்த்து, நெல் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து உத்திரமேரூர் வேளாண்மை உதவி இயக்குனர் முத்துலட்சுமி கூறியதாவது:உத்திரமேரூர் வட்டாரத்தில் கரும்பு சாகுபடியை அதிகரிக்க, விவசாயிகளுக்கு வேளாண்மை துறை வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதில், தரமான விதை கரும்புகளை விவசாயிகளுக்கு வழங்கி, அதை நடவு செய்யும் முறைகள் குறித்து அவ்வப்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், பூச்சிகளின் தாக்குதலில் இருந்து கரும்புகளை பாதுகாக்க, நீர்ப்பாசன முறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் கரும்புகளை இயந்திர அறுவடை செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.