சாலை நடுவில் இடையூறாக மின்கம்பம் இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்தட பாதைக்கான மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், கைத்தறி நெசவாளர் பயிற்சி மையத்திற்கும், கைத்தறி கணினி வடிவமைப்பு மையம் அலுவலகத்திற்கு இடையே உள்ள சாலையின் மையப்பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால், வாகன போக்குவரத்துக்கு மின்கம்பம் இடையூறாக உள்ளது.இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் மின்கம்பம் இருப்பது தெரியாமல் கம்பத்தில் மோதி விபத்தில் சிக்குகின்றனர்.மேலும், கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் சாலை வளைவில் திரும்பும்போதும், எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படுகிறது.எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் மையப்பகுதியில் உள்ள மின்கம்பத்தை சாலையோரம் இடமாற்றம் செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் மின்பகிர்மானம் வட்டம், ஓரிக்கை பிரிவு, உதவி பொறியாளர் சோழராஜன் கூறியதாவது:கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் குடியிருப்புகள் இல்லாதபோது மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் பின் குடியிருப்புகள் உருவானதால், அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.மின்கம்பத்தை சாலையோரம் மாற்றினாலும், அருகில் உள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது இதனால், புதைவட மின்கம்பி அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.