உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஆதார் அட்டை இல்லாததால் பள்ளியில் சேர்க்க முடியல :இருளர் பழங்குடியினர் காஞ்சி கலெக்டரிடம் மனு

 ஆதார் அட்டை இல்லாததால் பள்ளியில் சேர்க்க முடியல :இருளர் பழங்குடியினர் காஞ்சி கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம்: ''ஆதார், ரேஷன் அட்டை, பிறப்பு சான்று என, எந்தவித ஆவணங்களும் இல்லாததால், பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முடியவில்லை,'' என, இருளர் பழங்குடியின மக்கள், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்தனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பட்டா, ரேஷன் அட்டை, வேலைவாய்ப்பு, உதவித்தொகை, ஆக்கிரமிப்பு என, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 369 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் எட்டு பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை, கலெக்டர் கலைச்செல்வி வழங்கி, குறைகளை கேட்டார். இக்கூட்டத்தில், இருளர் பழங்குடியின மக்கள், தங்களுக்கு ஆதார், ரேஷன் அட்டை, பிறப்பு சான்று என எந்த ஆவணங்களும் இல்லை எனவும், தங்களுக்கு ஆவணங்களை ஏற்படுத்தி வழங்க கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை மனு வழங்கிய இருளர் பழங்குடியினர் கூறியதாவது: நாங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிறோம். மானாம்பதி, சிறுகாவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அரிசி ஆலைகளில், குடும்பத்தினருடன் சேர்ந்து பணியாற்றி அங்கேயே வசிக்கிறோம். எங்களுக்கு, ஆதார் அட்டையும், பிறப்பு சான்று, ரேஷன் அட்டை, சொந்தமாக வீடு என எதுவும் இல்லை. எங்களுக்கு ஆதார் இல்லாததால், எங்களது மகன், மகளுக்கும் ஆதார் அட்டை எடுக்க முடியவில்லை. இதனால், மருத்துவ சிகிச்சை பெறவும், பள்ளியில் சேரவும் முடியாமல் மிகுந்த சிரமப்படுகிறோம். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு விரைவாக ஆதார் அட்டை எடுத்து வழங்க, கலெக்டரிடம் கேட்டுள்ளோம். சிறுவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் தெரிவித்தார். பெரியவர்களுக்கு பிறகு பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ