உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பருவ மழை துவங்கும் நேரத்தில் டெண்டர்... சரிதானா? * தடுப்பணை, ஏரி சீரமைப்புக்கு ரூ.25 கோடி

பருவ மழை துவங்கும் நேரத்தில் டெண்டர்... சரிதானா? * தடுப்பணை, ஏரி சீரமைப்புக்கு ரூ.25 கோடி

காஞ்சிபுரம்:வெங்கச்சேரி தடுப்பணை, தாமல், கோவிந்தவாடி ஆகிய ஏரிகள் சீரமைப்பு பணிகளுக்கு, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, நீர்வளத் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், பணிகள் எந்த கதியில் நடக்கும் என, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து தாலுகாக்கள் உள்ளன. இதில், 381 ஏரிகள் நீர்வளத் துறை கட்டுப்பாட்டிலும்; 380 ஏரிகள் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் என மொத்தம், 761 ஏரிகள் உள்ளன. இதுதவிர, செய்யாறு, பாலாறு, வேகவதி ஆறு என, மூன்று ஆறுகள் உள்ளன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவ மழைக்கு நிரம்பும் ஏரி உபரி நீர், ஆற்று வெள்ள நீரில், மாவட்டத்தில் இருக்கும் சிற்றேரி, பெரிய ஏரி, தாங்கல், குளம், குட்டை உள்ளிட்ட நீராதாரங்கள் நிரம்பி வருகின்றன. இந்த நீரை பயன்படுத்தி, 45,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், ஜவ்வாது மலை பகுதியில் உருவாகும் செய்யாறு, பெருநகர் வழியாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் நுழைந்து, அனுமந்தண்டலம், வெங்கச்சேரி உள்ளிட்ட ஆற்றுபடுகைகள் வழியாக, திருமுக்கூடல் பாலாற்றில் இணைகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் வழியாக செல்லும் செய்யாற்றின் குறுக்கே, தடுப்பணைகள் ஏதும் இல்லாததால், மழைக்கால வெள்ளப்பெருக்கின் போது, செய்யாற்று நீர் வீணாக செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் வயலுார் வங்கக்கடலில் கலக்கிறது. செய்யாற்றின் குறுக்கே ஏதேனும் ஒரு கிராமத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை ஏற்று, 2017ம் ஆண்டு வெங்கச்சேரி செய்யாற்றில் தடுப்பணை கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு கட்டி முடித்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு பருவ மழைக்கு செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், இந்த தடுப்பணை முழுமையாக நிரம்பி வழிந்தது. அப்போது, தடுப்பணை வழியாக வெளியேறும் தண்ணீரை, காவாந்தண்டலம், வயலுார் உள்ளிட்ட ஏரிகள் நிரப்பப்பட்டன. தடுப்பணை ஷட்டரில், லேசான தண்ணீர் கசிவு காரணமாக, அணையில் தண்ணீர் தேங்க முடியாமல், வீணாக வெளியேறி வந்தது. பயன்பாட்டிற்கு வந்த ஒரு சில ஆண்டுகளிலேயே தடுப்பணை சேதம் அடைந்துவிட்டது என, விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கு, நீர்வளத் துறையினர் மறுப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும், தடுப்பணை ஓரம் கருங்கற்கள் கொட்டி பராமரிப்பு பணி செய்தனர். எனினும், நிரந்திரமாக சீரமைப்பு பணிக்கு நிதி கேட்டு பரிந்துரை செய்திருந்தனர். காவாந்தண்டலத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய் சீரமைப்பு பணி மற்றும் வெங்கச்சேரி தடுப்பணை சீரமைக்கும் பணிக்கு என, 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளனர். அதேபோல, கோவிந்தவாடி சிற்றேரி, பெரிய ஏரி ஷட்டர் சீரமைப்பு, மதகு சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். மேலும், தாமல் ஏரிக்கு கரை சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்பு சுவர் கட்டுவதற்கு, ஆறு கோடி ரூபாய் என, மொத்தம் 25 கோடி ரூபாய்க்கு வளர்ச்சி பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. செய்யாறு தடுப்பணை, கோவிந்தவாடி மற்றும் தாமல் ஏரி சீரமைப்பு ஆகிய வளர்ச்சி பணிகள் செய்தால், 4,000 ஏக்கர் நீர் பாசனத்திற்கு வழி வகுக்கும் என, நீர்வளத் துறை வட்டாரம் தெரிவித்தது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: செய்யாறு ஆற்றின் குறுக்கே, வெங்கச்சேரி தடுப்பணை, காவாந்தண்டலம் ஏரிக்கு செல்லும் கால்வாய் சீரமைப்பு ஆகிய பணி மற்றும் தாமல், கோவிந்தவாடி ஆகிய ஏரி சீரமைப்பு பணிகளுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு டெண்டரும் விடப்பட்டுள்ளது. பணிகள் ஓரிரு வாரங்களில் துவங்கி, இரு ஆண்டுகளுக்குள் முடிக்க உள்ளோம். மேலும், அரசு ஒதுக்கீடு செய்யும் நிதிகளுக்கு ஏற்ப வளர்ச்சி பணிகள் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். நிதியை சரியாக பயன்படுத்தனும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, தடுப்பணை இல்லாமல் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வந்தது. தடுப்பணை கட்டினால், காவாந்தண்டலம் சிற்றேரி, பெரிய ஏரி, வயலுார் ஆகிய கிராம ஏரிகள் நிரம்பும் என, கூறி வந்தோம். அரசும் தடுப்பணை கட்டி கொடுத்தது. வெள்ள நீர் செல்வதற்கு ஏற்ப, கால்வாய் ஏற்படுத்தவில்லை. தற்போது, கால்வாய் துார்வாருவதற்கும், தடுப்பணை கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நிதியை சரியாக பயன்படுத்தி கால்வாய் துார்வாரவும், தரமான தடுப்பணை கட்டி கொடுக்கவும் வேண்டும். -ப. சிவசங்கர், விவசாயி, காவாந்தண்டலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை