உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்பாடு இல்லாத சுரங்கப்பாதையை சீரமைக்க காஞ்சி மக்கள் வலியுறுத்தல்

பயன்பாடு இல்லாத சுரங்கப்பாதையை சீரமைக்க காஞ்சி மக்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் ரயில்வே கிராசிங் அருகில், பயன்பாடின்றி வீணாகும், இருவழி சுரங்கப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, இந்திரா நகர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலைய கிராசிங்கில் மேம்பாலம், 2022ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதையடுத்து, எந்த முன்னறிவிப்பும் இன்றி எல்.சி., 29 எண்ணுடைய ரயில்வே கேட் மூடப்பட்டு, சுரங்கப்பாதை அமைக்க, ரெடிமேட் கான்கிரீட் பாக்ஸ் தயார் செய்யப்பட்டதோடு, மூன்று ஆண்டுகளாக அப்பணி கிடப்பில் போடப்பட்டது. மேம்பாலத்தில் நடைபாதை வசதி இல்லை. இதனால், கால்நடைகளும் பாதசாரிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால், ரயில்வே கிராசிங் அருகில் உள்ள அன்னை இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு நகரில் வசிக்கும், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 3 கி.மீ., மேம்பாலத்தை சுற்றிக் கொண்டு தங்களது வீடுகளுக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் சங்க தலைவர் கதிர்வேலு கூறியதாவது: ரயில்வே மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும், காஞ்சிபுரம் கலெக்டரிடமும், சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற சப் - கலெக்டர் ஆஷிக் அலியிடமும், எல்.சி., 29 ரயில் கேட் அருகில் உள்ள கோனேரிகுப்பம் ஊராட்சி, கார்த்திக் நகர் முதல் தெருவையும், இந்திரா நகரை ஒட்டியுள்ள கனக துர்க்கை அம்மன் நகரை இணைக்கும் வகையில் பயன்பாடின்றி ரயில்வே இருவழி சுரங்கப்பாதை உள்ளதை சீரமைத்து கொடுக்க மனு கொடுத்துள்ளோம். எனவே, தற்போது பயன்பாடின்றி இருக்கும் இந்த இருவழி ரயில்வே சுரங்கப்பாதையை சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், ரயில்வே நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து காஞ்சிபுரம் ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்திரா நகர் -- கார்த்திக் நகர் முதல் தெரு இடையே பயன்பாட்டில் இல்லாத இருவழி சுரங்கப்பாதையை ஆய்வு செய்து, அதற்கேற்ப நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி