காஞ்சி சர்வ தீர்த்த குளம் சீரமைப்பு பணி துவக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான, சர்வ தீர்த்த குளம், 34 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் - அரக்கோணம் செல்லும் சாலையில், ஒலிமுகமதுபேட்டை அருகில் சர்வ தீர்த்த குளம் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளம், ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு, 45 லட்சம் ரூபாய் செலவில், குளம் துார்வாரப்பட்டு, சுற்றிலும் நடைபாதை, சுற்றுச்சுவருடன் கம்பி வேலி அமைக்கப்பட்டது. இந்நிலையில், சுற்றுச்சுவரின் ஒரு பகுதி விரிசல் ஏற்பட்டும், நடை பாதையில் செடி, கொடிகள் வளர்ந்தும் இருந்தன. எனவே, குளத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஹிந்து சமய அறநிலையத் துறை, ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம், 34 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறியதாவது: காஞ்சிபுரம் சர்வ தீர்த்தகுளம் 34 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதில், நடைபாதை சீரமைக்கப்பட்டு டைல்ஸ் பதித்தல், குளத்தின் சுற்றுச்சுவர் சீரமைத்து வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. டிச., 8ம் தேதி நடைபெற உள்ள ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத் திற்கு முன் சர்வ தீர்த்த குளம் சீரமைக்கும் பணி முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.