உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி காந்தி சாலை நெரிசலுக்கு தீர்வு காண...புதுமுயற்சி! : மூன்று வழி பாதையாக மாற்றியது போலீஸ்

காஞ்சி காந்தி சாலை நெரிசலுக்கு தீர்வு காண...புதுமுயற்சி! : மூன்று வழி பாதையாக மாற்றியது போலீஸ்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரின் நெரிசல் மிகுந்த பகுதியான காந்திரோட்டில், இருவழிப் பாதையாக இருந்த நிலையில், அவற்றை மூன்றுவழிப் பாதையாக மாற்றி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால், சாலையின் இரு புறங்களிலும், இலகுரக வாகனங்களும், சாலையின் மையத்தில் கனரக வாகனங்கள் செல்வதால், நெரிசலின்றி வாகனங்கள் செல்கின்றனர். காந்திரோட்டில் பல ஆண்டுகளாக நீடித்த வாகன நெரிசல் பிரச்னைக்கு இப்போது தீர்வு கிடைத்துள்ளது.காஞ்சிபுரம் நகரில் பட்டு சேலை வாங்குவதற்காக, வெளியூர்வாசிகள் அன்றாடம் வருவதால், நகரின் முக்கிய சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல், கோவில்களுக்கு வரும் பக்தர்களும், தங்களின் கார்களை ஆங்காங்கே நிறுத்துவதால், நெரிசல் ஏற்படுகிறது. நகரில் அதிக நெரிசல் ஏற்படும் பகுதியாக, காந்தி சாலை உள்ளது. இங்கு, பட்டு சேலை கடைகள், ஜவுளி கடைகள் என, 500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. இதனால், முகூர்த்த நாட்களில், ரங்கசாமி குளம் முதல் மூங்கில் மண்டபம் வரை, வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரவாசிகள் மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகளும் எதிர்பார்த்து வந்தனர்.இந்நிலையில், காஞ்சிபுரம் காந்தி சாலையில், இருசக்கர வாகனங்கள், கார் போன்ற இலகுர வாகனங்கள் எளிமையாக செல்ல தனி பாதையை அமைத்து, கடந்த வாரம் போலீசார் முன்னோட்டம் பார்த்தனர்.ஒரு புறத்தில் மட்டும் தனி பாதை அமைத்த இந்த நடவடிக்கை கை கொடுத்ததால், காந்தி ரோட்டில், இரு புறங்களிலும் கார், இருசக்கர வாகனங்களுக்கு தனி பாதை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.சாலையில் இருபுறங்களிலும் இலகுரக வாகனங்கள், கடைகளுக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், காந்திரோட்டின் நடுவே, பேருந்து, கார், இருசக்கர வாகனம் ரங்கசாமி குளம் நோக்கி நேராக நெரிசலின்றி ஒரு வழிப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதாவது, மூங்கில் மண்டபம் முதல் ரங்கசாமி குளம் வரை இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இருவழிப் பாதையாக இருந்த, காந்திரோடு மூன்று வழிகளில் வாகனங்கள் செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால், மூங்கில் மண்டபம் முதல் ரங்கசாமிகுளம் வரை எந்தவித நெருக்கடியும் இன்றி வாகனங்கள் செல்ல முடியும். வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வரும் கார், வேன், பேருந்து போன்ற வாகனங்கள், காந்திரோட்டிற்கு செல்ல வேண்டுமானால், விளக்கடி கோவில் தெரு, மேட்டுத்தெரு வழியாக சென்று காந்திரோடுக்கு செல்ல வேண்டும்.காஞ்சிபுரம் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க முந்தைய ஆட்சியாளர்கள், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். தொழிற்சாலைகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் நகருக்குள் அனுமதி மறுக்கப்பட்டு, நகருக்கு வெளியே நிறுத்தப்பட்டன. இந்த நடவடிக்கை நெரிசலை குறைக்க சற்று உதவியது.அதேபோல, 2021ல், காந்திரோட்டின் ஒரு புறம் பார்க்கிங் ஆக மாற்றப்பட்டது. வெளியூர்வாசிகளுக்கு இந்த நடவடிக்கை பயன்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காந்திரோட்டில் உள்ளூர்வாசிகள் பலரும் தங்களது கார்களை, நாள் முழுதும் நிறுத்தி, பார்க்கிங் இடமாக மாற்றியதால், அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.அதேபோல, 9 ஆண்டுகளுக்கு முன்பாக, ஷேர் ஆட்டோக்களுக்கு மட்டும் தனி நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டன.ஷேர் ஆட்டோக்கள் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நின்று செல்ல வேண்டும் எனவும், இஷ்டபடி சாலையில் நிறுத்தக் கூடாது என, போலீசார் எச்சரித்தனர். ஆனால், ஷேர் ஆட்டோக்கள் போலீசாரின் உத்தரவை மதிக்காததால், அந்த நடவடிக்கையும் கைவிடப்பட்டது.இந்நிலையில், நகரின் அதிகளவு நெரிசல் ஏற்படும் பகுதியான காந்திரோட்டில் போக்குவரத்து மாற்றம், நெரிசலை குறைத்திருப்பதால், நகரவாசிகள் இந்த நடைமுறையே தொடர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.காந்திரோட்டில் கொண்டு வரப்பட்ட இந்த நடவடிக்கை நகர் முழுதும் போலீசார் மேற்கொள்ள நகரவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.விளக்கடி கோவில் தெரு, மேட்டுத் தெரு, செங்கழுநீரோடை வீதி போன்ற பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை வேண்டும். செங்கழுநீரோடை வீதியில் உள்ள டாஸ்மாக் கடையால், வாகன நெரிசல் அதிகளவு ஏற்படுகிறது. நகரின் பிற இடங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், செங்கழுநீரோடை வீதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ஏராளமான மதுபிரியர்கள் வருவதால், கூட்டம் அலைமோதுகிறது.இதனால், ஆங்காங்கே டூ - வீலர், சைக்கிள் போன்ற வாகனங்களை நிறுத்தி விடுவதால், கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. டாஸ்மாக் கடையை அகற்ற அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த புதிய நடைமுறை, இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் கடைகளுக்கு எளிதாக செல்ல முடியும்.காந்திரோட்டில் இந்த மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பூக்கடைச்சத்திரம், விளக்கடி கோவில் தெரு, ராஜவீதிகள், மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.நெரிசலை குறைக்க தேவையான நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காந்திரோட்டில் பட்டு சேலை கடைகள் மட்டுமல்லாமல் ஏராளமான ஜவுளி கடைகளும் செயல்படுகின்றன. இதில் பல ஜவுளிக்கடைகள் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவதற்கான வழி செய்திருந்தன. போலீசாரின் இந்த நடவடிக்கை காரணமாக, ஆக்கிரமிப்புகள் பல அகற்றப்பட்டு, சாலையின் இரு புறங்களிலும், கார், இருசக்கர வாகனங்கள் செல்ல வழி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், எளிதாக இரு புறங்களிலும் செல்ல முடிவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ