| ADDED : டிச 04, 2025 04:32 AM
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை, குன்றத்துார், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கார்த்திகை தீப திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. ஒரகடம் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவிலில், நேற்று கார்த்திகை தீப உத்சவத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் தீபத்தைக் கையிலேந்தி பிரகாரத்தை வலம் வந்து முருகனை வழிபட்டனர். மாலை 6:30 மணிக்கு மயில் மண்டபத்தில் கார்த் திகை தீபம் ஏற்றப்பட்டது. இரவு 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. குன்றத்துார் முருகன் கோவிலில், நேற்று மாலை, கோவில் வளாகத்தில் மலைமீது அமைந்துள்ள, 12 அடி உயரமுள்ள துாணின் மீது அகண்ட தீபம் ஏற்றுவதற் காக, பெரிய அளவிலான இரும்பு அகல், நெய் ஊற்றி திரியுடன் வைக்கப்பட்டது. பின், கொட்டும் மழையிலும் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. வாலாஜாபாதில், 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்த அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில், நேற்று திருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மாலை 6:30 மணிக்கு இக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சங்கு ஒலிகளுடன் தீப வழிபாடு நடைபெற்றது. பின், கோவில் மண்டபம் மீது தீபம் ஏற்றப்பட்டது.