உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கார்த்திகை மாவளி விற்பனை மழையால் மந்தம்

 கார்த்திகை மாவளி விற்பனை மழையால் மந்தம்

காஞ்சிபுரம்: 'மழையின் காரணமாக, காஞ்சிபுரத்தில் நடப்பாண்டு கார்த்திகை மாவளி விற்பனை மந்தமாக உள்ளது' என, வியாபாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கார்த்திகை தீபத்தன்று மூன்று நாட்களும், மாலை நேரத்தில் வீடு, கடை, கோவில்களிலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபடுவர். அப்போது சிறுவர்கள் கார்த்திகை மாவளிக்கு தீமூட்டி, கயிற்றில் கட்டி, சுற்றி விளையாடுவர். அப்போது, மாவளியில் இருந்து உதிரும் தீப்பொறிகள், பூக்கள் போலவும், மீன்கள் நீந்துவதைப்போல் வட்ட வடிவத்தில் பறந்து செல்வதை பார்த்து மகிழ்வர். சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் மாவளியை ஆர்வத்துடன் சுற்றுவர். கார்த்திகை தீபத்தையொட்டி காஞ்சிபுரம் ரயில்வே சாலை, செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை மாவளி 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வத்துடன் மாவளியை வாங்கிச் சென்றனர். இருப்பினும் மழையின் காரணமாக நடப்பாண்டு, விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து புதுச்சேரியைச் சேர்ந்த மாவளி விற்பனை செய்த வியாபாரி பிரகாஷ் கூறியதாவது: கடந்த 9 ஆண்டுகளாக கார்த்திகை தீப திருவிழாவின்போது, புதுச்சேரியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு வந்து கார்த்திகை மாவளி விற்பனை செய்து வருகிறேன். கடந்தாண்டு ஒரு மாவளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்தேன். காஞ்சிபுரத்தில் இரு நாட்களாக மழை பெய்வதால், போதுமான வியாபாரம் ஆகவில்லை. இதனால், விலையை 10 ரூபாய் குறைத்து, ஒரு மாவளியை 60 ரூபாய்க்கும், இரண்டாக வாங்கினால், 100 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன். கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு 300 மாவளி விற்பனை ஆனது. தற்போது, 120 - 150 மாவளி மட்டுமே விற்பனை ஆகிறது. விஷ்ணு தீபமான இன்று மழை இல்லாவிட்டால், விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறேன் இவ்வாறு அவர் கூறினார். மாவளி சுற்றுதல் பனை மரத்தின் உலர்ந்த பூக்களை பறித்து அதை தீயிட்டு கொளுத்தியபின், அதை துகள்களாக்கி, அதனுடன் அடுப்பு கரி துகள்களையும் கலந்து, துணியில் வைத்து, உருண்டை போல சுற்றுவர். பின், மூன்றாக பிரிக்கப்படும் பச்சை பனை ஓலை மட்டைக்குள், துணி உருண்டையை வைத்து, கயிற்றால் மேலும், கீழும் இறுக்கமாக கட்டுவர். இதன் மேல்புறம் நீண்ட கயிற்றை கட்டி, துணி உருண்டையின் மேல் நெருப்பு மூட்டி, கையில் கயிற்றை பிடித்து சுற்றுவதை கார்த்திகை மாவளி சுற்றுதல் என, அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ