உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சூரசம்ஹார விழாவில் அசுரனை வதம் செய்த முருகன்

சூரசம்ஹார விழாவில் அசுரனை வதம் செய்த முருகன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு, சூரசம்ஹார விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ஆறு ஆண்டுகளுக்கு பின், கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி வெகு விமரிசையாக துவங்கியது. நேற்று காலை மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. சண்முகருக்கு, சத்ருசம்கார திரிசதீ அர்ச்சனை, சூரனை வதஞ்செய்த சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன. மதியம் 3:00 மணிக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பின், எலுமிச்சை மாலை அலங்காரத்தில் முருகன் எழுந்தருளி, சூரனை வதஞ்செய்திட வீதி உலாவாக சென்றார். சிறப்பு ஏற்பாடு மாலை 6:00 மணிக்கு வடக்கு மாட வீதியில், கஜமுகாசூரன், தாரகாசூரன் ஆகிய அசுரர்களை முருகன் வதஞ் செய்தார். இறுதியாக, மாமரமாகி நின்ற சூரபத்மனை வதஞ்செய்து, சேவலும், மயிலுமாக்கி உடன் வைத்துக்கொண்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா, அரோகரா கோஷமிட்டு, சூரசம்ஹார உத்சவத்தைக் கண்டு, முருகனை வணங்கினர். நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் ஏற்படுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில் குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். உத்திரமேரூர் உத்திரமேரூர் தாலுகா, பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், முருகன் உபசன்னிதி உள்ளது. இக் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று நடந்தது. முன்னதாக, காலை 9:00 மணிக்கு முருகன் சிலைக்கு நெய், பால், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பழச்சாறு ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு சூரனை வதம் செய்து வெற்றி கொள்ளும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடந்தது. அதேபோல, மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோவிலிலும், உத்திரமேரூர் பாலசுப்பிரமணியர் கோவிலிலும், உத்திரமேரூர் இரட்டைதாலீஸ்வரர் கோவிலிலும் கந்த சஷ்டி விழா நேற்று நடந்தது. குன்றத்துார் குன்றத்துார் முருகன் கோவிலில், நேற்று மாலை, சூரபத்மனை வதம் செய்ய, முருகன் குதிரை வாகனத்தில் புறப்பட்டார். மாலை 5:00 மணிக்கு சூரசம்ஹாரம் துவங்கியது. யானை, ஆடு, மாடு, குதிரை, புலி உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை, முருகப்பெருமான் வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. சூரசம்ஹாரம் நடந்து கொண்டிருந்த போது மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். - நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி