தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் காஞ்சியில் விபத்து அபாயம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆண்டாள் நகரில், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால், அப்பகுதியில் மின் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி, 42வது வார்டு, ஆண்டாள் நகரில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், இரு மின்கம்பங்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகம் உள்ளதால், மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால், காற்றடிக்கும்போது மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி பறப்பதோடு, மின்தடை ஏற்படுகிறது. கட்டுமான பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள்,சவ ஊர்வல வாகனம் செல்லும்போதும், மின்கம்பியில் வாகனம் உரசும் அபாய நிலை உள்ளதால், நீளமான குச்சி வாயிலாக ஆபத்தான முறையில் மின்கம்பியை உயரமாக துாக்கி பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதில், நிலைதடுமாறினால், மின்விபத்து ஏற்பட்டு அதிகளவு உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இரண்டு கனரக வாகனங்கள் எதிரெதிரே வரும்போது, சாலையோரம் ஒதுங்கும் வாகனம் மின் கம்பியில் உரசி மின்விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மின்விபத்தை தவிர்க்கும் வகையில், காஞ்சிபுரம் ஆண்டாள் நகரில், தாழ்வாக செல்லும் மின்கம்பியை இழுத்து கட்டி சீரமைக்க அப்பகுதியில் கூடுதல் மின்கம்பம் அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காஞ்சிபுரம் ஆண்டாள் நகரில், மின்கம்பிகள் தாழ்வாக செல்லும் பகுதியை ஆய்வு செய்து, சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.