இளையனார்வேலுார் முருகர் கோவில் டிச., 5ல் மஹா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், இளையனார்வேலுாரில் பழமையான பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2009 ஏப்., 13ல் நடந்தது.கும்பாபிஷேகம் நடந்து 14 ஆண்டுகள் கடந்த நிலையில் இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து, உபயதாரர்கள் வாயிலாக கோவிலில் ராஜகோபுரம், மஹா மண்டபம், உற்சவர் மண்டபம், சுற்றுச்சுவர், நவக்கிரஹ சன்னிதி உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தையொட்டி, டிச., 1ம் தேதி, காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடக்கிறது.டிச., 2ம் தேதி மாலை 5:00 மணிக்கு முதல்கால யாசாலை துவங்குகிறது. டிச., 5ம் தேதி காலை 7:35 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசம் புறப்பாடும், தொடர்ந்து 8:30 மணிக்கு ராஜகோபுரம் விமானம், பாலசுப்பிரமணிய சுவாமி, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 12:00 மஹா அபிஷேகமும், மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.விழாவிற்கான கோவில் செயல் அலுவலர் கதிரவன், அறங்காவலர் குழு தலைவர் கோதண்டராமன், அறங்காவலர்கள் விஜயன், மண்ணாபாய், கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் இளையனார்வேலுார் கிராமத்தினர் இணைந்து செய்து வருகின்றனர்.