ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அலுவலகம் அருகே, நேற்று முன்தினம் இரவு, முகத்தில் காயங்களுடன் கிடந்த, அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அலுவலகம் அருகே, தேரடி பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள பிள்ளைமண்டபம் பகுதியில், நேற்று முன்தினம், இரவு 11:00 மணிக்கு, தலை மற்றும் முகத்தில் வெட்டுகாயங்களுடன், உடல் கிடப்பதை கண்ட அப்பகுதியினர், ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அங்குள்ள கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். 50 மீட்டர் தொலைவில், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அலுவலகம் உள்ள, ஸ்ரீபெரும்புதுாரின் முக்கிய சாலையான இங்கு, முக காயங்களுடன் கிடந்த அடையாளம் தெரியாதவரின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில், காவலாளி பெல்ட் அணிந்திருந்த அந்த நபர் யார் என்பது குறித்த விபரமும் தெரியவில்லை. அவர் எப்படி கொலை செய்யப்பட்டார். வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, உடலை கொண்டுவந்து இங்கு வீசிவிட்டு சென்றார்களா என்றும், முன் விரோதத்தால் நடந்த கொலையா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தெரு விளக்கு, 'சிசிடிவி' அவுட்
ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அலுவலகம் அருகே, சம்பவம் நடந்த, தேரடி சாலையில் கேமராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளது. இங்குள்ள 10க்கும் மேற்பட்ட தெரு மின் விளக்குகள், பல நாட்களாக எரிவதில்லை. இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த சாலையில் பல குற்ற சம்பவங்கள் நடக்கின்றன.