கனிம வள அறக்கட்டளையின் இருப்பு 7 கோடி 3 நிலுவைப் பணிகள் ரத்து செய்து அறிவிப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்துார் ஆகிய தாலுகாக்களில், சங்கராபுரம், ஆற்பாக்கம், பழவேலி, திருமுக்கூடல், பினாயூர், கரணை உள்ளிட்ட 25 கிராமங்களில், கனிம வளம் என, அழைக்கப்படும் பூமிக்கடியில் இருந்து பாறைகளை வெடிவைத்து உடைத்து எடுக்க கனிம வள துறை அனுமதி அளித்துள்ளது.பெரும்பாலான தனியார் கல் குவாரிகளுக்கு, கிராவல் மண் அள்ளவும் மற்றும் கற்களை வெட்டி எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.இந்த குவாரிகளில் கிடைக்கும் வருவாயில், குவாரி குத்தகை எடுத்த உரிமையாளர்கள், 30 சதவீதம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும். பத்து சதவீதம் மாவட்ட கனிம வள அறக்கட்டளைக்கு என, மொத்தம், 40 சதவீத கட்டணத்தை, மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும்.சுரங்கம் மற்றும் குவாரிகளால் பாதிக்கப்படும் கிராமங்களில், குடிநீர், சுகாதாரம், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தை நலன், வயதுவந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், திறன் மேம்பாடு ஆகிய 60 சதவீத வளர்ச்சி பணிகளுக்கு, கனிம வளத்துறையினர் செலவிடுகின்றனர்.அதன்படி, 2018 - 19ம் நிதி ஆண்டு முதல், 2024 - 25ம் நிதி ஆண்டு வரை, 22.31 கோடி ரூபாய் கனிம வள அறக்கட்டளைக்கு வருவாய் நிதி கிடைத்துள்ளது. இந்த நிதியில், 13.32 கோடி ரூபாய் வளர்ச்சி குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட 85 விதமான பல்வேறு பணிகளுக்கு மற்றும், 1.33 கோடி ரூபாய் நிர்வாக செலவினங்களுக்கு என, மொத்தம் 14.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனன. இதில், 7.64 கோடி இருப்பு உள்ளது. இதற்கு, விரைவில் பணிகள் தேர்வு செய்யப்பட உள்ளது என, கனிம வளத்துறையினர் தெரிவித்தனர்.இதுகுறித்து, கனிம வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிர்வாகத்திற்கு கிடைத்த வருவாயில் 85 விதமான பணிகள் தேர்வு செய்து நடந்து வருகிறது.இதில், 52 பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 13 பணிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மீதம், 20 பணிகள் நடந்து வருகின்றன. ரத்து செய்த பணிகளுக்கு பதிலாக வேறு பணிகள் தேர்வு செய்யப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.