உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உள்வாங்கிய திருவள்ளூர் சாலை அச்சத்தில் வாகன ஓட்டிகள்

உள்வாங்கிய திருவள்ளூர் சாலை அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் சாலை நடுவே, நேற்று, திடீரென சாலை உள்வாங்கியதால், வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வந்தனர். ஸ்ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம் சிப்காட் தொழிற் பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்து, கனரக வாகனங்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட தான்தோன்றி அம்மன் கோவில் நுழைவாயில் எதிரே, நேற்று காலை திடீரென சாலை உள்வாங்கியது. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வந்தனர். இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர், சாலை உள்வாங்கிய இடத்தை சுற்றி பேரிகேட் வைத்து, பாதுகாப்பு ஏற்படுத்தினர். ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடாததால், சாலை நடுவே உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி