வாலாஜாபாத் அரசு மருத்துவமனை எதிரே மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில், தாசில்தார் அலுவலகம் அடுத்து வாலாஜாபாத் வட்டார அரசு பொது மருத்துவமனை உள்ளது. வாலாஜாபாத் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், இந்த மருத்துவமனைக்கு தினமும் வந்து செல்கின்றனர். பலரும் இருசக்கர வாகனங்கள் வாயிலாக மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். மேலும், வாலாஜாபாத் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த வாகன ஓட்டிகளும், இச்சாலையை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கின்றனர். இந்நிலையில், இந்த மருத்துவமனையை ஒட்டிய சாலையோரப் பகுதியில், அதிக அளவிலான மண் குவிந்து காணப்படுகிறது. இதனால், லாரி, வேன் மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு வழிவிட்டு, சாலை ஓரம் ஒதுங்கி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தங்களது வாகன சக்கரங்கள் மண்ணில் சிக்கி அவ்வப்போது விபத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலையோர மண்ணால் வாகன ஓட்டிகள் சிரமபடுகின்றனர்.மேலும், மழை நேரங்களில் சாலை ஓரத்தில் சேர்ந்த மண் சேறாக மாறி, இருசக்கர வாகனங்கள் சறுக்கல் ஏற்பட வழிவகுக்கிறது. எனவே, வாலாஜாபாத் வட்டார அரசு மருத்துவமனை எதிரே சாலை ஓரங்களில் குவிந்துள்ள மண்னை அகற்றி விபத்துகளை தவிர்க்க சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.