சுகாதார நிலைய ஜன்னல் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் அட்டகாசம்
ஸ்ரீபெரும்புதுார்:செரப்பனஞ்சேரி அரசு துணை சுகாதார நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர்.குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சியில் 15வது நிதி குழு மானியத்தின் கீழ், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், கடந்த மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தோர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், துணை சுகாதார நிலைய கட்டட வளாகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.பின், மது போதையில், துணை சுகாதார நிலைய ஜன்னல் கதவின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.தொடர்ந்து, சமூக விரோதிகள் பல்வேறு சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், செரப்பனஞ்சேரி பகுதிகளில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து வந்து, துணை சுகாதார நிலையம் உட்பட பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.