உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்வாய்கள் பராமரிப்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம் 85 ஏரிகளில் தண்ணீர் சேகரிப்பதில் சிக்கல்

கால்வாய்கள் பராமரிப்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம் 85 ஏரிகளில் தண்ணீர் சேகரிப்பதில் சிக்கல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், கம்பன் கால்வாய் மற்றும் மக்ளின் கால்வாய் என, இரு கால்வாய்கள் சீரமைக்கும் பணியில் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், 85 ஏரிகளில் தண்ணீர் சேகரிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம் அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும், கம்பன் கால்வாய், 44 கி.மீ., துாரம் செல்கிறது.இந்த கால்வாய் வழியாக, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களின், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் வாயிலாக, 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கம்பன் கால்வாயை, நீர்வளத் துறை அதிகாரிகள் பராமரிப்பு பணிகள் செய்யாததால், சீமைக் கருவேல மரங்கள் மற்றும் நாணல் மண்டியுள்ளதால், மழைக்காலத்தில் ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளது.குறிப்பாக, தைப்பாக்கம், பெரியகரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், நெல்வாய், தண்டலம், மேல் பொடவூர் ஆகிய இடங்களில் கால்வாய் கரைகள் ஆங்காங்கே சேதப்படுத்தி உள்ளனர்.சிறுவாக்கம் பகுதியில் கம்பன் கால்வாய் நடுப்பகுதி சுடுகாடாக மாற்றப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றன. மேலும், விஷகண்டிகுப்பம், மதுரா மேட்டூர், சிறுவாக்கம், பரந்துார், நாகப்பட்டு கூட்டு சாலை, தண்டலம், ஏகனாபுரம், சிங்கல்பாடி ஆகிய கிராமங்களை ஒட்டி கம்பன் கால்வாய் கரைப் பகுதியை சிலர் கரையை வெட்டி பாதையாக மாற்றியுள்ளனர்.இதனால், மழை காலத்தில் கம்பன் கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் கிராமம் மற்றும் வயல்வெளிகளில் புகும் அபாயம் உள்ளது.அதேபோல, தைப்பாக்கம் கிராமத்தில் இருந்து, ஒழுக்கோல்பட்டு, மேல் வேண்பாக்கம், கீழ்வேண்பாக்கம், திருமால்பூர் ஆகிய கிராமங்களின் வழியாக கோவிந்தவாடி ஏரிக்கு செல்லும் மக்ளின் கால்வாயும் போதிய பராமரிப்பு இன்றி இருப்பதால், மழைக்காலத்தில் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.எனவே, கம்பன் கால்வாய் மற்றும் கோவிந்தவாடி மக்ளின் கால்வாய் ஆகிய இரு கால்வாய்களில் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஏரிகளுக்கு செல்லும் நீரோட்டத்தை தடையின்றி வழி வகை செய்ய வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதி பரசுராமன் கூறியதாவது:அறிவியல் வளர்ச்சி பெறாத காலத்தில், ஆங்கிலேயர்கள் உருவாக்கிய நீர்வழித் தடங்களின் வாயிலாக, பல ஏரிகளுக்கு தண்ணீரை எடுத்து சென்று நிரப்பி, விவசாயம் செய்து உள்ளனர்.இதை, நீர்வளத் துறையினர் முறையாக கணக்கெடுத்து பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் செய்யவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிலர் கால்வாய் கரை ஆக்கிரமிப்பு மற்றும் சேதப்படுத்துவது உள்ளிட்ட முறைகேடான செயல்களில் ஈடுபடுகின்றனர்.இதை எல்லாம் சரி செய்து, ஏரிகள் நிரம்ப நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை, விரைவில் செய்தால் பல ஏரிகளில் தண்ணீரை சேமிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, காஞ்சிபுரம் நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கம்பன் கால்வாய் மற்றும் மக்ளின் கால்வாய் ஆகிய இரு கால்வாய்களை ஆய்வு செய்துவிட்டு, ஏரிகளுக்கு தடையின்றி தண்ணீர் செல்ல வழி வகை செய்யப்படும். மேலும், சீமைக் கருவேல மரங்கள் புதர் மண்டி இருந்தாலும், அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை