ஒரகடம் சர்வீஸ் சாலையில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்
ஸ்ரீபெரும்புதுார்:திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்பும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, காஞ்சிபுரம் -- பாலுார் உள்ளிடட் முக்கிய சாலைகளை இணைக்கும் சாலையாக, வண்டலுார் - - வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளின் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பேருந்து, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் இந்த சாலையின் வழியே சென்று வருகின்றனர்.இச்சாலையில், ஒரகடம் தேசிய வாகன ஆராய்ச்சி மையம் அருகே, சாலையோரம் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் சாலையில் படர்ந்துள்ளதால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக பாதி சாலையை ஆக்கிரமித்துள்ள, சீமை கருவேல மரங்களால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களை பதம் பார்க்கிறது.இரவு நேரங்களில் செல்லும் போது, வாகன ஓட்டிகள் முடிசெடிகளின் மீது விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்து வருன்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக, சர்வீஸ் சாலையில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.