| ADDED : மார் 12, 2024 09:48 PM
சென்னை:கொரட்டூர் அடுத்த பாடி, குமரன் நகரைச் சேர்ந்தவர் சிவா, 31; இவர், அதே பகுதியில் 'சிக்கன் பக்கோடா' கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அவரது கடைக்கு மதுபோதையில் வந்த நபர், சிவாவிடம், 'ஓசி'யில் சிக்கன் பக்கோடா கேட்டு மிரட்டியுள்ளார்.அதற்கு சிவா, 'காசு கொடுத்தால் தருகிறேன்; ஓசியெல்லாம் கிடையாது' என மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த போதை நபர், சிவாவின் கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்தி தப்பிச் சென்றார்.பலத்த காயமடைந்த சிவாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொரட்டூர் போலீசார், சம்பவ இடத்தில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகள் பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர் குறித்து விசாரித்தனர்.இதில், பாடி, குமரன் நகரைச் சேர்ந்த உதயா, 26, என்பது தெரிய வந்தது. நேற்று காலை கொரட்டூர் போலீசார் உதயாவை கைது செய்தனர்.