காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை ஆயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்தும் நிலையில், ஆக்கிரமிப்புகள், திருநங்கையர் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும், சாலை பழுது, கழிவுநீர் தேக்கம் போன்ற காரணங்களால், பயணியர் சிரமப்படுகின்றனர். அரசியல்வாதிகளின் தலையீட்டால், நடவடிக்கை எடுக்க மாநகராட்சியினர் அச்சப்படுகின்றனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப் பகுதியில், 3 ஏக்கர் பரப்பளவில், அண்ணா பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு, அன்றாடம் அரசு, தனியார் என, 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.பேருந்தில் பயணிப்போர் மட்டுமல்லாமல், பயணியரை வழியனுப்ப வருவோர், வியாபாரிகள் என, ஒரு நாளைக்கு, 10,000 பேர் வரை, பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். நெரிசல்
அவ்வாறு வரும் பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகளோ அல்லது பாதுகாப்போ இல்லாததால், பயணியரால் பேருந்து நிலையத்துக்கு அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது.பேருந்துகள் உள்ளே வந்து செல்ல, இரு பிரதான வழிகள் இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் காரணம் காட்டி, காமராஜர் சாலை வழியாக பேருந்துகள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. கிழக்கு ராஜ வீதி பக்கம் மட்டும் பேருந்துகள் வந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன.இதனால், போலீஸ் பூத் அமைந்துள்ள பகுதி முழுதும் சாலையோர கடைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. காய்கறி, துணி, பூ, பழம் என, அனைத்து வகையான கடைகளையும் சாலையிலேயே வைத்து விற்பனை செய்வதால், பாதசாரிகளுக்கு நடக்கக்கூட இடமில்லாத நிலை நீடிக்கிறது. 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை, சாலையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். நாள் முழுதும் இந்த வாகனங்கள் அங்கேயே நிற்பதால், மேலும் நெரிசல் ஏற்படுகின்றன.குறிப்பாக, பேருந்து நிலையத்தின் சாலை முழுதும் பழுதாகி, ஏராளமான இடங்கள் பள்ளங்களாக காட்சியளிக்கின்றன. குடிநீர் வசதியும் சரிவர இல்லாததால், கடைகளில், 20, 30 ரூபாய்க்கு, பணம் கொடுத்து குடிநீர் பாட்டில் வாங்க வேண்டிஉள்ளது. புதிதாக கட்டியுள்ள தகரத்தால் ஆன, பெரிய அளவிலான நிழற்கூரை அருகே, அடிக்கடி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால், பேருந்து நிலையத்துக்கு வரும் வெளியூர், வெளிமாநில சுற்றுலாவாசிகள் முகம் சுளிக்கின்றனர். குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் நகரம் ஆன்மிக ஸ்தலம் என்பதால், வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அன்றாடம் காஞ்சிபுரம் வருகின்றனர். பட்டு சேலை வாங்கவும் பலர் குடும்பத்துடன் பேருந்து நிலையம் வருகின்றனர்.அவ்வாறு, வரும் வெளியூர்வாசிகளுக்கு, பேருந்து நிலையத்தில், சுகாதாரமான கழிப்பறை வசதி கூட இல்லை.மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான பொது கழிப்பறைகள், அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.பேருந்து நிலையத்தை சுத்தமாகவும், ஆக்கிரமிப்புகள் இன்றியும் பராமரிக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக, நகரவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.பேருந்து நிலையத்தின் பெரும்பகுதி, வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது. இதனால், மூலதன மானிய நிதி திட்டத்தில், 80 லட்சம் ரூபாய் மதிப்பில், பேருந்து நிலையத்தை, மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க உள்ளது.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவுநீர் தேங்காமல் இருக்க வடிகால், சாலை, வண்ணம் அடிப்பது உள்ளிட்ட வசதிகள் செய்ய, 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் பணி நடக்கிறது. டெண்டர் இறுதி செய்தவுடன் பேருந்து நிலையத்தை சீரமைக்க உள்ளனர்.பேருந்து நிலைய சீரமைப்பு பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'பேருந்து நிலையத்தில் கழிவுநீர் சில இடங்களில் தேங்குகிறது. அவற்றை சரிசெய்ய வடிகால் கட்டுவது, ஆர்.ஓ., குடிநீர் வழங்குவது என, பயணியருக்கு தேவையான அடிப்படையான அனைத்து வசதிகளும் இந்த நிதியில் செய்ய உள்ளோம். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது பற்றி, போலீசாருடன் கலந்து ஆலோசிwத்து தான் முடிவு செய்ய முடியும்' என்றார்.
ஓயாத பிரச்னை!
பேருந்து நிலையத்திற்குள் வரும் பொதுமக்களிடம், திருநங்கையர், பிச்சைக்காரர்கள், இன்று வரை பிரச்னை செய்து வருகின்றனர். பேருந்து நிலையத்திற்குள் வரும் ஆண்களிடம், பணம் கேட்டு தொந்தரவு செய்யும் திருநங்கையர், அவர்களின் பாக்கெட்டுகளில் உள்ள பணத்தை எடுத்து வழிப்பறி செய்வது போல, அத்துமீறுகின்றனர். போலீசார் ரோந்து வரும்போது, அங்கிருந்து நகர்ந்து செல்லும் திருநங்கையர், மீண்டும் பேருந்து நிலையத்தில் பயணியரிடம் தொந்தரவு செய்கின்றனர்.இதுகுறித்து, போலீஸ் எஸ்.பி.,சண்முகத்திடம் கேட்டபோது, 'ஏற்கனவே மூன்று திருநங்கையரை கைது செய்துள்ளோம். பலமுறை அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். பேருந்து நிலையம், கோவில் ஆகிய இடங்களில் அவர்களை விரட்ட, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.