31 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்க திட்டம் ஆய்வுக்கு பின் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதி
காஞ்சிபுரம்:சொர்ணவாரி பருவ நெல் கொள்முதல் செய்வதற்கு, 31 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்க நுகர்பொருள் வாணிப கழகம் திட்டமிட்டுள்ளது. ஆய்வறிக்கைக்கு பின், நெல் கொள்முதல் செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தி ல், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 1.50 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில், சம்பா மற்றும் நவரை ஆகிய இரு பருவங்களிலும், 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சொர்ணவாரி பருவத்தில், தண்ணீர் பற்றாக்குறை, கோடை வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 30,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். ஒவ்வொரு பருவத்திற்கும், நெல் அறுவடை செய்யும் போது, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் நெல் கொள்முதல் நிலையங்களை துவக்குகின்றனர். இதன் வாயிலாக, கணிசமான நெல் கொள்முதல் செய்து, அரிசியாக மாற்றி கூட்டுறவு துறைக்கு கொடுத்து விடுகின்றனர். இதில், நவரை பருவத்திற்கு மட்டும், மாவட்டம் முழுதும் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் அனுமதி அளிக்கின்றனர். நுகர்பொருள் வாணிப கழகத்தில் மட்டு மல்லாது, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினரும், நவரை பருவத்திற்கு நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கி, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கின்றனர். அதன்படி, கடந்த நவரை, சம்பா பருவத்திற்கு நுகர்பொருள் வாணிப கழத்தினர் கட்டுப்பாட்டில், 95 நெல் கொள்முதல் நிலையங்களும், தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினர் கட்டுப்பாட்டில், 33 நெல் கொள்முதல் நிலையங்கள் என மொத்தம், 128 நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு, 1.5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் துவங்கும் சொர்ணவாரி பருவத்தில், 12,500 ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்தனர். இதில், 5,000 ஏக்கர் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இதில், சிறுவாக்கம், புள்ளலுார், கம்மவார்பாளையம், கோவிந்தவாடி, புதுப்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் நெல் அறுவடை செய்துள்ளனர். நெல் விற்பனை செய்வதற்கு, வியாபாரிகளை தொடர்பு கொண்டால், 80 கிலோ அடங்கிய நெல்லின் விலை, 1,200 ரூபாய்க்கு மேல் நெல்லின் விலை விற்கவில்லை என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கினால், அதே எடையுள்ள நெல்லின் விலை,1,800 ரூபாய் வரையில் கிடைக்கும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்தது. மேலும், நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்கள் நடத்துவோர் தரப்பில் தனித்தனியாக புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கள ஆய்வு செய்து 31 இடங்களில் திறக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மண்டல நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 31 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்க திட்டமிட்டுள்ளோம். கள ஆய்வு செய்வதற்கு, நான்கு நபர்கள் அடங்கிய குழுவினரை நியமித்துள்ளோம். அவர்களின் ஆய்வறிக்கை வந்தவுடன் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.