| ADDED : ஜன 24, 2024 01:09 AM
அண்ணா நகர்:குடியிருப்பு பகுதியில், மாடு முட்ட வந்த அதிர்ச்சியில், முதியவர் மயங்கி விழுந்து இறந்தார். சென்னை, அண்ணா நகர், நடுவாங்கரை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 76. இவர், நேற்று முன்தினம் இரவு அதேபகுதியில் நடந்து சென்றார். அப்போது, குடியிருப்பின் நடுவில் சுற்றித்திரிந்த இரு மாடுகள், திடீரென சாலையிலேயே சண்டையிட்டு கொண்டன. சிறிது நேரத்தில் மாடுகள் மிரண்டு ஓடி, அதில் ஒன்று ஆறுமுகத்தை முட்ட பாய்ந்தது. அதிர்ச்சியடைந்து நிலைதடுமாறிய ஆறுமுகம்,அங்கேயே மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் முதியவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில் ஆறுமுகம் இறந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து வந்த அண்ணா நகர் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்தனர். மாடு முட்ட வந்த அதிர்ச்சியில் மாரடைப்பால் ஆறுமுகம் உயிரிழந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிந்தாக போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'நடுவாங்கரை பகுதியில் மாடுகள் அட்டகாசம் அதிகளவில் உள்ளன. தினமும் சாலையில் செல்வோரை அச்சுறுத்தி வருகின்றன. மாடு முட்டியதில் தான் முதியவர் உயிரிழந்தார்' என்றனர்.