உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அடாவடி கட்டணத்தில் ஆட்டோக்கள் காஞ்சியில் புறநோயாளிகள் கடும் அவதி

அடாவடி கட்டணத்தில் ஆட்டோக்கள் காஞ்சியில் புறநோயாளிகள் கடும் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ரயில்வே சாலையில் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் 3,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.அதுமட்டுமல்லாமல், உள்நோயாளிகள், உடனிருப்போர், பார்வையாளர்கள் என, ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களிடம், மருத்துவமனை வெளியே உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் அடாவடியாக கட்டணம் கேட்பதாக, நோயாளிகள் பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.நோயாளியை பார்த்த உடன், 2 கி.மீ., துாரத்துக்கும் குறைவான இடங்களுக்கும், 150 முதல் 200 ரூபாய் என, ஆட்டோ ஓட்டுனர்கள் கேட்கின்றனர். குறிப்பாக, கர்ப்பிணியர் குழந்தை பெற்றுக்கொண்ட பின், டிஸ்சார்ஜ் ஆகும்போது, 250 முதல் 300 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.பல ஆண்டுகளாக தொடரும் இந்த கட்டண கொள்ளையை வட்டார போக்குவரத்து அலுவலர், ஆய்வாளர் போன்ற அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆனால், போக்குவரத்து துறை அதிகாரிகள், ஆட்டோ தொடர்பாக வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.இதனால், நோயாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் என, பலரும் அவதிப்படுகின்றனர். ஆட்டோ ஓட்டுனர்கள், நோயாளிகளிடம் கனிவாக பேசி, சரியான கட்டணம் பெறுவதற்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !