அவளூரில் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
வாலாஜாபாத், வாலாஜாபாத் அடுத்த, அவளூர், கண்ணடியன்குடிசை, நெய்க்குப்பம் மற்றும் அங்கம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இப்பகுதிகளில், கிணறு மற்றும் பாலாற்று பாசனம் வாயிலாக, பல ஏக்கர் பரப்பில் விவசாயிகள், முப்போகம் நெல் சாகுபடி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.நடப்பு ஆண்டு சம்பா பட்டத்திற்கு, கடந்த டிசம்பர் மாத துவக்கத்தில் நடவு செய்த நெல் பயிர்கள், சில இடங்களில் அறுவடை பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன.மேலும், இப்பகுதி 80 சதவீத நிலங்களில், தற்போது நெல்கதிர் முற்றி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இதனால், விவசாயிகளும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளனர்.இக்கிராமங்களில் அறுவடையான நெல்லை, அவளூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.நடப்பாண்டிற்கு இன்னும் அவளூர் பகுதியில், நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், விவசாயிகள் நெல் அறுவடை செய்வதில் தாமதம் காட்டி வருகின்றனர்.எனவே, அவளூரில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் துவக்க வேண்டும் என, அவளூர், அங்கம்பாக்கம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.