வரதராஜ பெருமாள் கோவிலில் ராஜகோபுரங்களுக்கு பாலாலயம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவில், 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கோவிலுக்கு கிருஷ்ணதேவராயர், பராந்தக சோழன், பல்லவ மன்னர்கள், ஹொய்சால மன்னர்கள் உள்ளிட்டோர் திருப்பணி செய்துள்ளனர்.பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம், 2012ம் ஆண்டு நடந்தது. தற்போது, 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இக்கோவிலில் உள்ள மேற்கு ராஜகோபுரத்திற்கும், கிழக்கு ராஜகோபுரத்திற்கும், பிற சன்னிதிகளையும் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து, வரதராஜ பெருமாள் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர்.அதன்படி, முதற்கட்டமாக கிழக்கு, மேற்கு என, இரு ராஜகோபுரங்கள் மற்றும் உடையவர் சன்னிதிக்கான பாலாலயம் நேற்று நடந்தது. இதில், அதிகாலை 2:00 மணிக்கு திருமஞ்சனம் கொண்டுவரப்பட்டு பெருமாள் திருவாராதனம் நடந்தது.தொடர்ந்து, அதிகாலை 4:00 மணிக்கு மணிக்கு காலாகர்ஷணம், யாகசாலை பூஜை, பூர்ணாஹூதியும், காலை 6.00 மணிக்கு பாலாலயம் நடந்தது.