பல்லாங்குழியான புத்தகரம் சாலை
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கூட்டுச்சாலையில் இருந்து, புத்தகரம், மருதம் கிராமங்கள் வழியாக ராஜகுளம் சென்றடையும் சாலை உள்ளது.வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதியினர் மற்றும் செங்கல்பட்டு, ஒரகடம் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், சென்னை - பெங்களூரு சேதிய நெடுஞ்சாலையை விரைவாக அடைவதற்கு இக்கிராம சாலை வழி பயன்பாடாக இருந்து வருகிறது.தினமும் நுாற்றுக்கணக்கானோர், இச்சாலையை பயன்படுத்தி, கார், டூ - வீலர் வாயிலாக குறைந்த நேரத்தில் எளிதாக பல பகுதிகளுக்கு பயணிக்கின்றனர்.இந்நிலையில், இச்சாலை, இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு காணப்படுகின்றன.இதனால், இச்சாலை வழியாக இரவு, பகலாக பயணிக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, புத்தகரம், மருதம் கிராம பகுதிகளில் பழுதான சாலைகளை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.