சாலையோரம் பார்த்தீனியம் செடி கால்நடைகள் பாதிக்கும் அபாயம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக கோயம்பேடு செல்லும் வாகனங்கள், கோனேரிகுப்பம் வழியாக சென்று வருகின்றன. கோனேரிகுப்பம் ஊராட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையோரம் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ளன.கால்நடைகள் இச்செடியை உண்பதால் குடல்புண், ஒவ்வாமை, பசியின்மை மற்றும் எடை குறைதல் போன்ற பல்வேறு பிரச்னை ஏற்படும் என, வேளாண் துறையினர் எச்சரிக்கின்றனர்.அதேபோல, மனிதர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு தோல் அரிப்பு, கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா ஏற்படும் அபாயம் உள்ளது. இவை சுற்றுச்சூழலையும் பாதிப்பதால், இந்த செடிகளை ஒழிக்க கடந்த 2011ம் ஆண்டு, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தது.எனவே, கோனேரிகுப்பம் ஊராட்சியில் சாலையோரம் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளை வேரோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.