வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதியின்றி பயணியர் அவதி
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணியர் அவதிப்படுகின்றனர்.காஞ்சிபுரம் - செங்கல்பட்டு வழிதடத்தில் வாலாஜாபாத் பிரதான சாலையில் இருந்து, ஒரகடம் செல்லும் சாலையில், வாலாஜாபாத் பேருந்து நிலையம் உள்ளது.வாலாஜாபாத் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இப்பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.இதேபோல, வாலாஜாபாதில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு வருவோரும், வாலாஜாபாத் பேருந்து நிலையம் வந்து பயணிக்கின்றனர்.இப்பேருந்து நிலையத்தில், பல ஆண்டுகளுக்கு முன், சிறு அளவிலான குடிநீர் தொட்டி அமைத்து அதன் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டது. முறையான பராமரிப்பின்மையால் அத்தொட்டி பழுதடைந்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இடிந்தது.இதையடுத்து, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால், அப்பேருந்து நிலையத்தில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் பணம் செலவு செய்துதான் தாகம் தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.