இலங்கை விமானத்தில் செல்ல 12 மணி நேரம் தவித்த பயணியர் விமான நிலையத்தில் போராட்டம்
சென்னை: சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட விமானம், இயந்திர கோளாறு காரணமாக திடீரென நிறுத்தப்பட்டது. 12 மணி நேரம் தவித்த பயணியர், முனையத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் காலை 9:45 மணிக்கு புறப்பட்டது. இதில் 252 பயணியர், 10 விமான ஊழியர்கள் என 262 பேர் இருந்தனர். ஓடு பாதையில் ஓடிக்கொண்டிருந்த போது, விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விமானி, ஓடுபாதையில் விமானத்தை நிறுத்தி, கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இழுவை வண்டி வரவழைக்கப்பட்டு, விமானம் 'பே' பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டது. விமானத்தினுள் இருந்த பயணியர், காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் குழுவினர், இயந்திர கோளாறு சரிசெய்யும் பணியை துவக்கினர். மதியம் 1:00 மணி கடந்தும் கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணியர், விமான நிறுவன ஊழியர்களை வார்த்தைகளால் வாட்டி எடுத்தனர். இதையடுத்து, பயணியருக்கு உணவு வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு புறப்படும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போதும் விமானம் தயாராகவில்லை. கடுப்பான பயணியர், முனையத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 'விமான கோளாறு சரிசெய்யப்பட்டது. இரவு 8:00 மணிக்கு விமானம் புறப்படும்' என, அந்நிறுவனம் அறிவித்தது. ஆனால், இரவு 9:30 மணிக்கே, சென்னையில் இருந்து கொழும்புக்கு, விமானம் புறப்பட்டது. ஒரு மணி நேரம் பயணம் செய்ய 12 மணி நேரம் பயணியர் காத்திருந்து அவதிப்பட்டனர்.