உத்திரமேரூரில் நில அளவையர் பற்றாக்குறை கிடப்பில் உள்ள மனுக்களால் மக்கள் அவதி
உத்திரமேரூர்,:உத்திரமேரூர் தாலுகாவில் நில அளவையர் பற்றாக்குறையால், உட்பிரிவு மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.உத்திரமேரூர் தாலுகாவில் உள்ள ஆறு குறுவட்டத்திற்கு, ஆறு நில அளவையர் பணியிடங்கள் உள்ளன. அதில், இந்த மாதத்தின் துவக்கத்திலே ஐந்து பணியிடங்களில் இருந்த நில அளவையரில், இரண்டு பேர் பணி இடமாறுதலிலும், மூன்று பேர் பதவி உயர்விலும் வெளியூர்களுக்கு சென்று விட்டனர். அதற்கு பதிலாக ஒரு நில அளவையர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளார். மீதமுள்ள ஐந்து பணியிடங்கள் காலியாக உள்ளன.அதனால், 500க்கும் மேற்பட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. நில உட்பிரிவு செய்ய 20 நாட்களுக்கு மேலாகும் என்று, நில அளவையர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.மேலும், நில அளவையர்கள் புதிதாக பணியில் சேர்ந்தவுடன், நில உட்பிரிவு பணிகள் துவங்கப்படும் என்று அதிகாரி தரப்பில் பொதுமக்களிடம் கூறப்படுகிறது.நில உட்பிரிவு மனு மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்படுவதால், அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.எனவே, உத்திரமேரூர் தாலுகாவில் காலியாக உள்ள நில அளவையர் பணியிடங்களை, உடனே நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து உத்திரமேரூர் தாசில்தார் தேன்மொழி கூறியதாவது:உத்திரமேரூர் தாலுகாவில் ஆறு நில அளவையர் பணியிடங்களுக்கு, ஐந்து பேர் பணியாற்றி வந்தனர். தற்போது, ஐந்து பேரும் பதவி உயர்வு, பணியிட மாறுதல் ஆகியவற்றின் காரணமாக வெளியூர்களுக்கு சென்று விட்டனர்.அதில், ஒரு நில அளவையர் மட்டும் வெளியூரில் வந்து பணியில் சேர்ந்துள்ளார். மற்ற ஐந்து பணியிடங்களுக்கான பணிகள் தொடர்ந்து தடைப்பட்டு வருகிறது.இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.