திருமுக்கூடலில் தார்ப்பாய் மூடாத கனரக வாகனங்களால் மக்கள் அவதி
திருமுக்கூடல்: திருமுக்கூடல் சுற்று வட்டாரத்தில் இயங்கும் தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து இயக்கப்படும் கனரக வாகனங்கள் தார்ப்பாய் மூடாமல் இயங்குவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், மதுார், சிறுதாமூர், பட்டா, அருங்குன்றம், பழவேரி, பினாயூர், சிறுமையிலுார் உள்ளிட்ட கிராமங்களில் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் ஏராளமாக இயங்குகின்றன. இந்த கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து இயங்கும் ஏராளமான கனரக வாகனங்கள், திருமுக்கூடல் பாலாற்று பாலம் மற்றும் பழவேரி, அருங்குன்றம், மதுார் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக இரவு, பகலாக இயங்குகின்றன. இதில், பெரும்பாலான கனரக வாகனங்கள் தார்ப்பாய் மூடாமல் இயக்கப்படுகின்றன. இதனால், லோடு வாகனங்களில் இருந்து கீழே கொட்டும் ஜல்லி மற்றும் காற்றில் பரவும் மண் போன்றவையால் அச்சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இ ரவு நேரங்களில் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதிகளில் தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து இயக்கப்படும் தார்ப்பாய் மூடாத லாரிகள் குறித்து ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்ற னர்.