கல் குவாரிக்காக காடுகள் அழிப்பதை தடுக்க கோரி கலெக்டரிடம் மனு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பட்டா கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம், கல்குவாரிக்காக காடுகள் அழிப்பதை தடுக்கக் கோரி, மனு ஒன்றை அளித்தார்.மனு விபரம்:உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூர் ஊராட்சிக்கு உட்பட்டது பட்டா கிராமம். இந்த கிராமத்தில், சர்வே எண்: 234/1ல், காடு புறம்போக்கு நிலம் உள்ளது. சுற்றிலும், 25 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டு புறம்போக்கு நிலங்கள் உள்ளன.இந்நிலையில், பட்டா கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு மத்தியில், புதியதாக தனியார் கல் குவாரி அமைக்க, இக்காட்டு புறம்போக்கு நிலம் வழியாக மண் பாதை அமைக்கப்படுகிறது.இதனால், ஆடு, மாடுகளின் மேய்ச்சலுக்கான இடம் அழிவதோடு, காடுகளில் பசுமையை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, தனியார் கல் குவாரிக்காக இப்பகுதியில் அரசுக்கு சொந்தமான காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.