உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி நகருக்கு ஒரே ஒரு சர்வேயர் பட்டா கோரி மனுக்கள் தேக்கம்

காஞ்சி நகருக்கு ஒரே ஒரு சர்வேயர் பட்டா கோரி மனுக்கள் தேக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகருக்கு ஒரே ஒரு நில அளவையர் மட்டுமே பணியாற்றுவதால், பட்டா தொடர்பான மனுக்கள் தேங்குவதாக புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் நில அளவை துறையில், காஞ்சிபுரம் நகருக்கு என, 3 நில அளவையர் பணியிடங்கள் உள்ளன. ஆனால், இரண்டு நில அளவையர் மட்டுமே, சில ஆண்டுகளாகவே பணியாற்றி வந்தனர். நிலங்களை அளப்பது, உட்பிரிவு பட்டா வழங்குவது, உட்பிரிவு இல்லாத பட்டா வழங்குவது, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி என, பல்வேறு பணிகளுக்கு இந்த இரண்டு நில அளவையர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், இரண்டு நில அளவையரில், ஒருவர் வாலாஜாபாத் தாலுகாவிற்கு தற்காலிக பணியிட மாற்றம் செய்து நில அளவை துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், காஞ்சிபுரம் நகர் முழுதுக்கும் ஒரு நில அளவையர் மட்டுமே பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாதந்தோறும் பட்டா மாற்றம் தொடர்பாகவே, 150க்கும் மேற்பட்ட மனுக்கள் வரும் நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நிலங்களை அளப்பது போன்ற பணிகளை ஒரே ஒரு நில அளவையரால் எவ்வாறு மேற்கொள்ள முடியும் என, கேள்வி எழுந்துள்ளது. மனுக்கள் தேங்குவதால், நிலங்களை அளக்க கோரும் விண்ணப்பதாரர்கள் புலம்புகின்றனர். எனவே, காஞ்சிபுரம் நகருக்கு தேவையான நில அளவையர்களை, நில அளவை துறை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ