செய்யாறு பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளால் உறுதித்தன்மை பாதிப்பு
உத்திரமேரூர்:பெருநகர் செய்யாறு பாலத்தின் பக்கவாட்டு சுவரில் அரச மரச்செடிகள் வளர்ந்து வருவதால், அதன் உறுதித்தன்மை பாதிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் -- வந்தவாசி நெடுஞ்சாலை, பெருநகருக்கும் வெள்ளாமலைக்கும் இடையே செல்லும் செய்யாறின் குறுக்கே, 15 ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம், நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள து. இந்த பாலத்தின் வழியே தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. மேலும், தனியார் தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பேருந்துகளும் தினமும் சென்று வருகின்றன. தற்போது, இந்த பாலம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பாலத்தின் பக்கவாட்டு சுவரில் அரச மரச்செடிகள் வளர்ந்து வருவதால், அதன் உறுதித்தன்மை பாதிக்கப்படுகிறது. அரச மரச்செடிகள் பெரிதாக வளரும்போது பாலம் சேதமடைந்து வீணாக வாய்ப்பு உள்ளது. எ னவே, பெருநகர் செய்யாறு பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.