பிளஸ் 1 மாணவி கூட்டு பலாத்காரம்? இரு மாணவர்கள் உட்பட மூன்று பேர் கைது
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கிராமத்தில் உள்ள பூங்கா அருகே, இரு மாணவர்கள், ஒரு வாலிபர் சேர்ந்து, 16 வயது பள்ளி மாணவிக்கு கூட்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். மூன்று பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை எல்லையில் வசிப்பவர் பிளஸ் 1 பயிலும் 16 வயது மாணவி. இவர், அதே பகுதி பூங்கா அருகே, கடந்த 8ம் தேதி இருந்துள்ளார்.அங்கு, இரு மாணவர்கள் உட்பட மூன்று பேர், மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்துள்ளனர். பின், அங்கிருந்து தப்பிச் சென்றனர்.வீட்டிற்கு வந்த மாணவி, இதுகுறித்து, தன் தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தார்.போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த அஜித், 22, என்பவரும், 10ம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவரும், 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவரும் சேர்ந்து, கூட்டாக, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மூன்று பேரையும், நேற்று கைது செய்தனர்.மூவரிடமும் வாக்குமூலம் பெற்ற போலீசார், இரு மாணவர்களையும், செங்கல்பட்டு சிறுவர் காப்பகத்தில் சேர்த்தனர். அஜித்தை, வேலுார் சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு பற்றி போலீசார் கூறியதாவது:காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு பூங்கா பகுதிக்கு, வாலிபர் அஜித், மாணவியை அழைத்து சென்றுள்ளார். அந்த மாணவிக்கு, அஜித்தை ஏற்கனவே தெரிந்துள்ளது. நட்பின் அடிப்படையில் அவருடன் மாணவி சென்றுள்ளார்.அங்கு, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த குளிர்பானத்தில் மதுவை கலந்து, மாணவியை குடிக்க வைத்துள்ளார். மாணவி மயக்கம் அடைந்துள்ளார்.இதையடுத்து அஜித், அவருடன் வந்த இரு மாணவர்கள், மாணவிக்கு கூட்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.மாணவி, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அதன் முடிவை பொறுத்து மற்ற நடவடிக்கை இருக்கும்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.