காஞ்சிபுரம்Lகாஞ்சிபுரம் மாவட்டத்தில், குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்களால், கடந்த ஐந்து ஆண்டுகளில் 289 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்தாண்டு 55 வழக்குகள் பதிவான நிலையில், நடப்பாண்டு, 108 வழக்குகள் பதிவாகி உள்ளன. போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக, குழந்தைகள் மீதான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொந்தரவுகளில் இருந்து அவர்களை பாதுகாக்கவே, 2012ல், போக்சோ சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, குற்றத்தை பொறுத்து ஏழு ஆண்டுகள் முதல் மரண தண்டனை வரை விதிக்க முடியும். இதற்கு சிறப்பு நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் போக்சோ வழக்குகள் குறைவதாக இல்லை. 289 வழக்குகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு 55 போக்சோ வழக்குகள் பதிவான நிலையில், இந்தாண்டு 108 வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், 289 வழக்குகள் பதிவாகி உள்ளன.
ஒரே ஆண்டில் வழக்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது, குழந்தை பாதுகாப்பு அலுவலர்களை அதிர்ச்சிய டைய வைத்துள்ளது. குழந்தைகளின் உறவினர்கள், பெற்றோரின் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள், அருகில் வசிப்பவர்கள் என, குழந்தைக்கு தெரிந்தவர்களே, இதுபோன்ற சம்பவங்களில் அதிகம் ஈடுபடுகின்றனர் என, குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கருக்குப்பேட்டையில் சிறுவனும், சிறுமியும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அடைக்கலம் தந்த ராஜா என்பவருக்கு, போக்சோ சட்டத்தின் கீழ், கடந்த ஜூனில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதே கருக்குப்பேட்டையில், கடந்தாண்டு அக்டோபரில், 5 வயது சிறுவன் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி இறந்தான். இந்த வழக்கில், அரசு ஊழியர் ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுமட்டுமல்லாமல், 18 வயதுக்குட்பட்ட பல சிறுமியருக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை பிறந்துள்ளது. சிறுவர், சிறுமியர் மீதான இந்த பாலியல் தாக்குதல்களால், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி நொடிந்து போயுள்ளனர். காரணம் என்ன? குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: ஊராட்சி முதல் மாநகராட்சி வரையிலான உள்ளாட்சிகள் தோறும், குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டம், குழந்தை திருமணம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். விழிப்புணர்வு அதிகமாகி இருப்பதால்தான், காவல் நிலையங்களில் தைரியமாக பெற்றோர் புகார் அளிக்கின்றனர். புகார் அளித்தால் நிச்சயமாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'சைல்டு லைன்' உதவி எண்ணான '1098'க்கு அன்றாடம் பலர் அழைத்து குழந்தைகள் தொடர்பாக பிரச்னைகளை கூறுகின்றனர். நடவடிக்கை எடுக்கிறோம். விழிப்புணர்வு இல்லாத இருளர் பழங்குடியினர் கூட இன்று, மகளிர் காவல் நிலையங்களில், போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளிக்கின்றனர். குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பெற்றோரின் கவனக்குறைவும், அலட்சியமும்தான், பாலியல் தொந்தரவுக்கான வாய்ப்பை அளிக்கிறது. பெற்றோரின் தொடர் கண்காணிப்பும், அன்பும், அக்கறையும் பாலியல் தொல்லையில் இருந்து குழந்தைகளை பெருமளவில் காக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். பெற்றோருக்கும் விழிப்புணர்வு தேவை
போதை பழக்கம் காரணமாக, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களில் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். குழந்தைகளை விட்டு விட்டு பெற்றோர் நீண்ட நேரம் வெளியில் இருப்பதுதான் இதற்கு காரணம். குடும்ப அமைப்பு குலைந்து விட்டதால், குழந்தைகளின் பாதுகாப்பும் குறைந்து விட்டது. தெரிந்தவர்களால்தான் சிறார், சிறுமியருக்கு பாலியல் தொந்தரவு அதிகமாகிறது. பெற்றோருக்கும் விழிப்புணர்வு தேவை. குழந்தைகளை தனிமையில் விடக்கூடாது; பெற்றோரின் கண்காணிப்பில் இருந்தால், இதுபோன்ற சம்பவங்கள் குறையும். - எஸ்.சக்திவேல், உறுப்பினர், இளைஞர் நீதி குழுமம், காஞ்சிபுரம்.