உத்திரமேரூரில் தொடர் திருட்டுகள் சிசிடிவிக்களை சரிசெய்த போலீசார்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், தாலுகா அலுவலகம், பி.டி.ஓ., அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் 5,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.அதனால், காஞ்சிபுரம் சாலை, பெண்கள் மேல்நிலை பள்ளி, எண்டத்துார் சாலை, பேருந்து நிலையம், வந்தவாசி சாலை ஆகிய இடங்களில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.இதை பயன்படுத்தி, பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடந்து வந்ததால், அதை தடுக்க போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.கடந்த ஓராண்டாக, கண்காணிப்பு கேமராக்கள் பராமரிப்பு இன்றி பழுதடைந்து இருந்தன. அதனால், அதை பயன்படுத்தி, பேரூராட்சியின் பல்வேறு இடங்களில், திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன.இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று பேரூராட்சியின் முக்கிய இடங்களில், பழுதடைந்து இருந்த கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்யும் பணியில், உத்திரமேரூர் போலீசார் ஈடுபட்டனர்.