கூரம் ஏரிக்கரை சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஆரியபெரும்பாக்கம் கூட்டு சாலையில் இருந்து, கூரம் ஏரிக்கரை கிராமம் வழியாக ஒழுக்கோல்பட்டு கிராம சாலை உள்ளது.இந்த ஏரிக்கரையோர சாலை வழியாக, ஒழுக்கோல்பட்டு, வதியூர், கீழ்வெண்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் ஆரியபெரும்பாக்கம் வழியாக, காஞ்சிபுரம் பகுதிக்கு சென்று வருகின்றனர்.அதேபோல, ஆரியபெரும்பாக்கம், சமத்துவபுரம் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள், கூரம் ஏரிக்கரை வழியாக ஒழுக்கோல்பட்டு நெமிலி, பனப்பாக்கம் உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.தற்போது, கூரம் ஏரிக்கரை சாலையில் மரண பள்ளங்கள் அதிகளவில் உள்ளன. மேலும், கலங்கல் தண்ணீர் செல்லும் கால்வாய் இருபுறமும் தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.எனவே, கூரம் ஏரிக்கரை சாலையை சீரமைக்கவும். மேலும், கலங்கல் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.