நீர்வரத்து கால்வாயில் குப்பை தண்ணீர் செல்வதில் சிக்கல்
உத்திரமேரூர்:-சிறுங்கோழியில் நீர்வரத்து கால்வாயில் குப்பை கொட்டப்படுவதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், சிறுங்கோழி திடீர் நகரில், 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகத்தினர், துாய்மை பணியாளர்கள் மூலமாக சேகரித்து வருகின்றனர். அவ்வாறு சேகரிக்கும் குப்பையை அங்குள்ள குப்பை கிடங்கில் கொட்டாமல், அருகிலுள்ள நீர்வரத்து கால்வாயில் கொட்டி வருகின்றனர். இதனால், நீர்வரத்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. தற்போது, நீர்வரத்து கால்வாயில் தண்ணீர் வராமல் வறண்டு காணப்படுகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன், நீர்வரத்து கால்வாயில் கொட்டப்படும் குப்பையை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டும், ஊராட்சி நிர்வாகத்தினர் மெத்தனமாக உள்ளனர். எனவே, நீர்வரத்து கால்வாயில் கொட்டப்படும் குப்பையை அகற்றி, கால்வாயை துார்வார நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.