பழங்குடியினர் குடும்பங்களுக்கு சோலார் மின்விளக்கு வழங்கல்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியில், 15 பழங்குடியின இருளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். குளக்கரையை ஒட்டி, குடிசை வீடுகளில் வசிக்கும் இவர்களது குடியிருப்பு பகுதியில், இதுவரை மின்வசதி ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் குழந்தைகள் படிக்க முடியாமலும், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் போன்ற தொல்லைகளாலும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தங்களது வசிப்பிட பகுதியில், மின்வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி வாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் குழந்தைகள் கண்காணிப்பகத்தின் சார்பில், மோட்டூர் குளக்கரையில் வசிக்கும் 15 பழங்குடியினர் குடும்பங்களுக்கும் இலவச சோலார் மின் விளக்குகள் நேற்று வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், அப்பகுதி ஊராட்சி தலைவர் அஞ்சலம் பங்கேற்று மின் விளக்குகளை வழங்கினார். குழந்தைகள் கண்காணிப்பக நிர்வாகிகள் ராஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.